

திருப்பூர்,
நவம்பர் மாதத்தில் நூல் விலையில் மாற்றம் ஏதும் இல்லை என்று நூற்பாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் பனியன் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. பருத்தி பஞ்சு விலையை பொறுத்து நூல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பஞ்சு விலை உயர்வால் நூல் விலை அதிகரித்து வந்தது.
பருத்தி தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பஞ்சுக்கான இறக்குமதி வரி வரிச்சலுகை டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டு பருத்தி சீசன் தற்போது தொடங்கியிருக்கிறது. பஞ்சு விலையும் குறைய வாய்ப்புள்ளது. இதன்காரணமாக நவம்பர் மாதத் துக்கான நூல் விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை.
பஞ்சு தட்டுப்பாட்டை தவிர்க்க, இறக்குமதியை ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது, பஞ்சு விலையில் மாற்றமில்லாததால், நூல்விலையிலும் மாற்றமில்லை என நூற்பாலை நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். அதன்படி கடந்த மாதம் நூல் விலையே தொடர்கிறது.
நூல் விலை வருமாறு:-
நூல் விலை வரி நீங்கலாக 20-ம் நம்பர் செமி கோம்டு ரகம் கிலோவுக்கு ரூ.295, 25-ம் நம்பர் ரூ.300, 30-ம் நம்பர் ரூ.305, 34-ம் நம்பர் ரூ.317, 36-ம் நம்பர் ரூ.324, 40-ம் நம்பர் ரூ.331, கோம்டு ரகம் 20-ம் நம்பர் ரூ.305, 25-ம் நம்பர் ரூ.310, 30-ம் நம்பர் ரூ.315, 34-ம் நம்பர் ரூ.327, 36-ம் நம்பர் ரூ.334, 40-ம் நம்பர் ரூ.341 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் நூல் விலையில் மாற்றம் இல்லாததால் திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். வரும் காலங்களிலும் பஞ்சு விலை உயராமல் இருக்கும் பட்சத்தில் நூல் விலையில் மாற்றம் இருக்காது என ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.