

மதுரை,
தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பொருட்காட்சிக்குச் சென்ற 13 வயது சிறுமியை 4 சிறார்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுகிறது. தமிழ்நாடு பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமா அல்லது பெண்களை கொடுமைப்படுத்தும் மாநிலமா என்று எண்ணும் அளவிற்கு தற்போது சிறார்கள் முதல் தங்கள் பாலியல் வக்கிரங்களால் பெண்களிடம் அத்துமீறியுள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறைக்கு முதலில் ஒரு வேண்டுகோள். நீங்கள் கல்வியில் சாதனை மாணவர்களை உருவாக்குவது ஒருபுறம் இருந்தாலும், பள்ளிகளில் மாணவர்களுக்கு முதலில் நல்ல ஒழுக்கத்தையும், பாலியல் கல்வியையும் கண்டிப்பாக கற்றுத் தர வேண்டும். பெண்கள் என்பவர்கள் போதைப் பொருள் அல்ல என்பதை உணர வைக்க வேண்டும். முதலில் முதியவர் அடுத்து இளைஞர் இன்று சிறார்கள் என பெண்கள் மீது நிகழ்த்தும் பாலியல் வக்கிரங்களுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடருமாயின் அவை சமூகத்தின் பெரும் சாபக்கேடாக அமையும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.