பொங்கல் தொகுப்பு கொள்முதலில் முறைகேடு எதுவுமில்லை; அமைச்சர் சக்கரபாணி

பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலில் முறைகேடு எதுவுமில்லை என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
பொங்கல் தொகுப்பு கொள்முதலில் முறைகேடு எதுவுமில்லை; அமைச்சர் சக்கரபாணி
Published on

சென்னை,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்தவகையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டன. குறிப்பாக இந்த பரிசு தொகுப்பில் இடம் பெற்றுள்ள நெய் ஆவின் நிர்வாகத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு கடந்த வார இறுதியில் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொருட்களை வினியோகிக்க வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தி.மு.க. ஆட்சியை குறை கூறவே பொங்கல் தொகுப்பு குறித்து அ.தி.மு.க. புகார் கூறுகிறது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, கடுமையான நிதி நெருக்கடியிலும் தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தே பணம் வழங்கப்பட்டது.

தி.மு.க. ஆட்சியில் வழங்கி வந்த பொங்கல் பரிசு தொகுப்பை அ.தி.மு.க. அரசு நிறுத்தியது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, தி.மு.க. அரசு கொரோனா நிவாரண நிதி ரூ.4,000 வழங்கியது.

பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலில் முறைகேடு இருந்தால் ஆதாரத்தோடு புகார் அளிக்கலாம். அந்த புகார் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க தயார் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com