

சென்னை,
கரூர் மாவட்டத்திற்கு ஒரு நாள் பயணமாக சென்ற தமிழக முதல்-அமைச்சர் விஜய், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு த.வெ.க. பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பேசினார். அப்போது அவர், “கரூர் போலீசார் நினைத்திருந்தால் எங்களை எச்சரித்து, அன்று கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம். கூட்டத்துக்கு ஏற்றபடி போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதா?
அன்று முதல்-அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடினார். என் குடும்ப உறவுகளை இழந்து வலியில் இருந்த என் மீதே பழியை போட்டார்கள். நான் ஓடி ஒளிந்துவிட்டேன் என்றார்கள். வாய் என்று ஒன்று இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா?” என்று ஆவேசமாக பேசினார்.
இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சு குறித்து தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “பேச்சிலே ஒரு கண்ணியம் இருக்க வேண்டும். இதுவரை தமிழக முதல்-அமைச்சர்கள் எதிர்க்கட்சிகளையும் அரவணைத்து, அனுசரணையாக பேசுவதைத்தான் நான் கேட்டிருக்கிறேன். ஆனால் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று பேசுவது முதல்-அமைச்சருக்கு முறையல்ல.
‘வெற்றி பெற்றவர்கள் எல்லாம் வீரர்கள் அல்ல’ என்று கண்ணதாசன் கூறுவார். இந்த வெற்றி நிலையானதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்படித்தான் ஒரு காலத்தில் எங்களை விட்டால் ஆளில்லை என்று காங்கிரஸ் சொன்னது. காங்கிரஸ் தோற்காமலா போய்விட்டது? அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம். அது இரண்டையும் ஒன்றாக பாவித்து அடுத்த முறை மக்களின் மனதை கவர்கிறவன்தான் அரசியல்வாதி. ஏதோ வந்துவிட்டோம் என்பதற்காக பேசக்கூடாது. அதுவும் சொந்த பலம் அல்ல, ஊரான் பலத்தில் வந்திருப்பவருக்கு இவ்வளவு கர்வம் தேவையில்லை.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.