தமிழகத்தில் 'நிபா' வைரஸ் இல்லை- பொதுசுகாதாரத்துறை


தமிழகத்தில் நிபா வைரஸ் இல்லை- பொதுசுகாதாரத்துறை
x

தமிழ்நாடு அரசு அனைத்து விதமான நோய் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

சென்னை,

தமிழ்நாடு பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

கேரளாவின் பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் சமீபத்தில் 'நிபா' வைரஸ் நோய் தாக்கங்கள் பதிவாகி உள்ளதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு நோய் பரவல் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. மேலும், தமிழ்நாடு அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.தமிழகத்தில் இதுவரை எந்தவித 'நிபா' வைரஸ் நோய் தாக்கங்கள் பதிவாகவில்லை என்றாலும், பொது மக்கள் பதற்றமின்றி விழிப்புடன் இருந்து அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.'நிபா' வைரஸ் என்பது விலங்கியல் மூலம் பரவும் ஒரு நோய் தொற்றாகும். இது, பழ வகை வவ்வால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. வவ்வாலின் உமிழ்நீரால் மாசுபட்ட பழங்களை உண்ணுவதன் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு கொள்வதன் மூலமாகவோ நோய் தொற்று பரவுகிறது.காய்ச்சல், தலைவலி, வாந்தி, குழப்பம், தூக்கமின்மை, மூச்சுதிணறல் அல்லது மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் உள்ளதா? என மக்கள் கவனிக்க வேண்டும். குறிப்பாக, கேரளாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்த பிறகு அல்லது நோய்வாய்ப்பட்ட ஒருவரை தொடர்பு கொண்ட பிறகு, இதுபோன்ற அறிகுறிகள் யாரிடமாவது தோன்றினால் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும்.கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களை, சிறப்பு கவனம் செலுத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், இந்த மாவட்டங்களில் உள்ள மருத்துவ குழுக்கள் சந்தேகத்திற்கிடமான நோய் தொற்றுகளை முன்கூட்டியே கண்டறிந்து செயல்பட தயார் நிலையில் உள்ளனர். தமிழ்நாடு அரசு அனைத்து விதமான நோய் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. எனவே, 'நிபா' வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய தேவையில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story