‘கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை’ - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
‘கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை’ - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
Published on

திருவொற்றியூர்,

சென்னை ராயபுரத்தில் உள்ள 5 பள்ளிகளைச்சேர்ந்த 738 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் பள்ளி மாணவர்களிடம் பொது அறிவு சார்ந்த கேள்விகளை கேட்டு, அதற்கு சரியான பதில் அளித்த 15 மாணவர்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கினார். அதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில்தான் பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இதுவே வரும் சட்டமன்ற தேர்தலில் தொடரும். இதில் எந்த மாற்றமும் இல்லை. கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் போகாது.

அ.தி.மு.க. முடிவின்படி முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி கட்சிகள் அனைவரும் இதை ஏற்றுக்கொள்வார்கள். முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்து பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் மற்றும் மாநில தலைவர் முடிவு செய்யும் அதிகாரம் கிடையாது. பா.ஜ.க. தேசிய தலைமை மாறுபட்ட கருத்தை கூற மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அ.தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக அதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு முடிவு செய்யும். முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்து பா.ம.க. நிறுவனர்தான் அறிவிப்பார் என்ற ஜி.கே. மணியின் கருத்தை அக்கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது.

நடிகர் கமல்ஹாசன் அரசியலிலும் நடித்து வருகிறார். அரசியலில் ஆஸ்கார் விருது வழங்கினால் அதை அவருக்கு அளிக்கலாம். எந்த கடனும் வாங்காமல் வளர்ச்சி அடைய முடியாது. உலகில் கடன் வாங்காத மாநிலம், நாடு உண்டா?

தொல்லியல் துறையில் தமிழ் தெரியாதவர்கள் தேர்வு செய்ய இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். தமிழ் தெரியாமல் யாரும் குரூப் தேர்வுகளில் வெற்றி பெற முடியாத நிலையை தமிழக அரசு உருவாக்கி உள்ளது.

தி.மு.க. ஒரு ஓடாத சினிமா. அதைப்பற்றி யாரும் பேச மாட்டார்கள். ஆனால் அ.தி.மு.க. புகழ் வெளிச்சத்தில் இருப்பதால் எங்களை பற்றி அதிகம் பேசுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com