திமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தொழிலாளர்கள் பாதுகாப்பு விவகாரத்தில் மெத்தனப் போக்குடன் திமுக அரசு செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Published on

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்து வந்த உமாராணி என்ற பெண் ஊழியர் கன்வேயர் பெல்டில் துணி, தலைமுடி சிக்கியதால் பரிதாபமாக உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். உயிரிழந்த உமாராணி குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

பால் பண்ணையில் பணி செய்யும் ஊழியர்கள் ஆபத்தான இயந்திரங்களுக்கு இடையில் பணிபுரியும் போது, அவர்களுக்கான பாதுகாப்பை ஆவின் நிர்வாகம் உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த விடியா திமுக ஆட்சியில், பட்டாசு ஆலை முதல் பால் பண்ணை வரை எங்குமே தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை.

பாலில் ஒரு முடி கூட உதிரக் கூடாது என்பதே ஆவின் நிறுவனத்தின் பாதுகாப்பு நெறிமுறை. ஆனால் முறையான பாதுகாப்பு வசதிகளை இந்த விடியா திமுக அரசு ஏற்படுத்தித் தராததன் விளைவாகவே இன்றைக்கு ஒரு பெண் தொழிலாளி தன் தலைமுடி சிக்கி, தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். பாதுகாப்பு விவகாரத்தில் மெத்தனப் போக்குடன் செயல்படும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

உயிரிழந்த உமாராணி அவர்களின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை வழங்குவதுடன், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் ஆவின் பால் பண்ணைகளில் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுவதை உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com