‘சட்டமன்றத்தில் அரசியல் விமர்சனங்கள் செய்வதில் எந்த தவறும் இல்லை’ - நிர்மலா சீதாராமன்

மாநில அரசுகள் வாங்கிய கடன் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதுதான் முக்கியம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
‘சட்டமன்றத்தில் அரசியல் விமர்சனங்கள் செய்வதில் எந்த தவறும் இல்லை’ - நிர்மலா சீதாராமன்
Published on

காஞ்சீபுரம்,

சட்டமன்றத்தில் அரசியல் ரீதியான விமர்சனங்களை செய்வதில் எந்த தவறும் இல்லை என மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கும்பாபிஷேகம்

மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ உபநிஷத் பிரம்மேந்திர மடத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் அவர் கலந்துகொண்டார்.

தொடர்ந்து புதுச்சேரி செல்லும் நிர்மலா சீதாராமன், அங்குள்ள மத்திய சரக்கு மற்றும் சேவை வரி(CGST) ஆணையரக வளாகத்தில், புதுப்பிக்கப்பட்ட ஆங்கிலேயர் காலத்து கலங்கரை விளக்கத்தை திறந்து வைக்க உள்ளார்.

முன்னதாக காஞ்சீபுரத்தில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பிறகு நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய் ‘குட்டிக் கதை’ மூலம் முன்னாள் முதல்-அமைச்சரை விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தவறு இல்லை

இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “சட்டமன்றத்தில் அரசியல் விமர்சனம் செய்யப்படாவிட்டால், வேறு எங்கே விமர்சனம் செய்வது? ஆளும் கட்சி பேசட்டும், எதிர்க்கட்சிகள் பதிலளிக்கட்டும். இதில் தவறு ஒன்றும் இல்லை" என்று அவர் கூறினார்.

மாநில அரசுகளின் கடன்

தொடர்ந்து மாநில அரசுகள் கடனாக பெறும் நிதி குறித்து பேசிய அவர், “நிதி பற்றாக்குறை நிலவும்போது, ​​பணம் வழங்குதல் போன்ற வருவாய் செலவினங்களை அதிகரிக்கும் செயல்களை தவிர்த்து, மாநில அரசுகள் தாங்கள் கடன் வாங்கிய நிதியை பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற நீண்ட கால மூலதனங்களில் செலவிட வேண்டும்.

கடன் வாங்குவது பிரச்சினையல்ல, ஆனால் வாங்கிய கடன் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதுதான் முக்கியம். முதலீடுகள் செய்வதிலும், கல்வி, தொழிற்சாலைகளைக் கொண்டுவருவதிலும், வேலைவாய்ப்பை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். மாநிலங்கள் தங்களின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) மூன்று சதவீதம் வரை கடன் வாங்க அனுமதி உள்ளது” என்றார்.

காஞ்சீபுரத்தில் மருத்துவமனை

காஞ்சிபுரத்தில் மருத்துவ கல்லூரி இல்லாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைப்பதை ஆதரிக்கும் கொள்கையை மூன்று பட்ஜெட்டுகளுக்கு முன்பே மத்திய அரசு அறிவித்திருந்தது.

காஞ்சீபுரத்தில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைப்பதற்கான ஒரு திட்ட முன்மொழிவை தமிழக அரசு சமர்ப்பிக்கலாம். மாநிலங்கள் தாங்கள் விரும்பும் எந்த மாவட்டத்திலும் மருத்துவமனை அமைக்க திட்டமிடலாம். தமிழக அரசு இதை புரிந்துகொண்டு அதற்கேற்ப திட்டங்களை வகுக்க வேண்டும்” என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com