தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதில் தவறு இல்லை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதில் தவறு இல்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதில் தவறு இல்லை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
Published on

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தின்னூரில் பொதுப்பணித்துறை பயணியர் விடுதியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து கூறியது, தனது கருத்தல்ல, வேறொருவரின் கருத்தை மேற்கோள் காட்டியிருப்பதாகவும், இதனால் யாருக்காவது மனவேதனை ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் நியாயம் வேண்டி போராடுபவர்கள் எதிர்பார்ப்பது வைரமுத்துவின் வருத்தத்தை அல்ல, மன்னிப்பைத்தான். வருத்தத்திற்கும், மன்னிப்புக்கும் நிறைய இடைவெளி உள்ளது. இந்த விவகாரத்தில் போராடுபவர்கள், நியாயத்தை எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக உயர்த்தப்படாத பஸ் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரையில், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதில் தவறு இல்லை.

காலத்தின் நிலையை கருதி எரிபொருள் கட்டண உயர்வு, மற்ற பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றை மனதில் கொண்டு நியாயமான முறையில் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தால் தவறு இருந்திருக்காது. ஆனால் இத்தனை ஆண்டுகள் ஏன் பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை? கட்டணத்தை உயர்த்தினால் ஓட்டு வராது என்று எண்ணியதுதான் காரணம்.

இவர்கள் ஓட்டு வங்கி அரசியலை நடத்தாமல், சிறிது, சிறிதாக பஸ் கட்டணத்தை உயர்த்தியிருந்தால் மக்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், நியாயமானதாக நினைத்திருப்பார்கள். இவர்கள் செய்த தவறால், தற்போது ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமை திணிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு பஸ்கள் இவ்வளவு மட்டமானதாக இருக்க என்ன காரணம்? பராமரிப்பு செலவு அதிகமானதற்கு என்ன காரணம்? என துறையில் பல்வேறு விஷயங்களை மனதில் கொண்டு ஆராய்ந்து, கட்டண உயர்வை பொதுமக்கள் தாங்கிக்கொள்ளும் அளவிற்கு உயர்த்தியிருந்தால் பிரச்சினை இருந்திருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com