

சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் சென்னை சத்யமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை சிறப்பாக செயல்பட்டார். நாளை மறுநாள் (2-ந்தேதி) சத்யமூர்த்தி பவனில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டணி அமைச்சரவையில் இருக்கிறோம். 59 ஆண்டுகளுக்குப் பிறகு கனவு நிறைவேறி இருக்கிறது. இரு கண்கள் போல இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடுகள் ஒவ்வொரு காங்கிரஸ்காரர்களுடைய மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தக் கூடியதாக இருக்கும். இரண்டு அமைச்சர்களும் காங்கிரஸ் கட்சியின் பெயரையும், மரியாதையையும் காப்பாற்றுவார்கள்.
காங்கிரசில் ஒரே அணிதான் இருக்கிறது. அது ராகுல் காந்தி அணி. ராகுல் காந்திக்காகத்தான் ஓட்டு. ராகுல் காந்திக்காகத்தான் கூட்டம். அவருக்காகத்தான் வெற்றி. அமைச்சரவையில் இருந்துகொண்டு தவெக அரசை விமர்சிப்பது சரியாக இருக்காது. தமிழ்நாட்டின் பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக அரசுக்கு எடுத்துச் சொல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
"எந்த நேரத்திலும் தேர்தல் வரும்" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "தோற்றவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும். 6 மாதத்தில் இடைத்தேர்தல் வரும். 3 ஆண்டுகள் கழித்து நாடாளுமன்ற தேர்தல் வரும். ஜெயிக்கப்போவது எங்கள் கூட்டணிதான்" என்று கூறினார்.