தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் உள்ளது - இந்தியன் ஆயில் நிறுவனம்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசலை நிரப்புவதற்காக தண்ணீர் பாட்டில்கள் மற்றும் வெள்ளை நிற எண்ணை கேன்களில் நிரப்பி செல்கின்றனர்.
தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் உள்ளது -  இந்தியன் ஆயில் நிறுவனம்
Published on

சென்னை,

ஈரான் போர் காரணமாக கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற அச்சத்தில் நாடு முழுவதும் ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

வீடுகளில் பெண்கள் சமையலுக்கு பயன்படுத்தும் சிலிண்டர் வினியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு எண்ணை நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளன.

இருப்பினும் சமையல் கியாசுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் பொதுமக்கள் போட்டிபோட்டுக்கொண்டு கியாஸ் முன்பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பலர் கியாஸ் ஏஜென்சிகளுக்கு நேரில் சென்று சிலிண்டர்களை வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதுபோன்ற சூழலில் பெட்ரோல் - டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரப்போவதாகவும் நேற்று இரவு திடீரென வதந்தி காட்டுத்தீபோல் பரவியது. இதன்காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்களுக்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் படையெடுத்தனர்.

இதேபோன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசலை நிரப்புவதற்காக தண்ணீர் பாட்டில்கள் மற்றும் வெள்ளை நிற எண்ணை கேன்கள், 25 லிட்டர் தண்ணீர் கேன்கள் ஆகியவற்றிலும் பெட்ரோல் - டீசலை நிரப்பு எடுத்து சென்றதையும் காண முடிந்தது. இப்படி அனைத்து மாவட்டங்களிலேமே விடிய விடிய பெட்ரோல் பங்குகளில் தூக்கத்தை தொலைத்து பொதுமக்கள் தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசலை நிரப்புவதில் ஆர்வம் காட்டினர். இன்றும் அதே நிலை நீடித்தது.

இதனிடையே பெட்ரோல் -டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதாக பரவிய தகவல் உண்மையில்லை என்றும் அது வதந்தி தான் என்றும், இதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் எண்ணை நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் உள்ளது, மக்கள் அச்சத்தில் அதிகமாக பெட்ரோல், டீசலை வாங்க வேண்டாம். எரிபொருளை சேமித்து வைப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

பெட்ரோல் நிலையங்களின் இருப்பு நிலை கண்காணிக்கப்படுகிறது,பெட்ரோல் நிலையங்களுக்கு விநியோகம் சீராக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைக்கும், தடையில்லா விநியோகத்தை உறுதி செய்ய உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com