

சென்னை,
தமிழக முதல்-அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் பிறந்தநாள் வருகிற ஜூன் 22-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால், அதை சிறப்பாகக் கொண்டாட த.வெ.க. நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர் இதுதொடர்பாக, கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது
கூட்டத்தில் பேசிய அமைச்சர் என். ஆனந்த், விஜயின் பிறந்தநாளை ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல் மற்றும் அன்னதானம் வழங்குதல் போன்ற சமூகநலப் பணிகள் மூலம் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் எந்த நிகழ்வும் நடத்தக் கூடாது என்றும், விஜய்யின் அறிவுறுத்தலின்படி பேனர்கள் மற்றும் கட்-அவுட்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். த.வெ.க.வில் பேனர் கலாசாரத்திற்கு இடமில்லை என்பதையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.