தர்ம தரிசனம் முறையில் மாற்றம் கூடாது: மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்

காலை 5 மணி முதல் 6 மணி வரை பக்தர்களை தர்ம தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தர்ம தரிசனம் முறையில் மாற்றம் கூடாது: மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்
Published on: 

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படும். பின்பு பக்தர்கள் காலை 5 மணி முதல் 6 மணி வரை தர்ம தரிசனம் முறையில் அம்மன், சுவாமியை தரிசனம் செய்து வந்தனர்.

பக்தர்கள் புகார்

அந்த தரிசனத்திற்காக பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிகாலையில் வந்து காத்திருந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இந்த தரிசன விவகாரத்தில் கோவில் பணியாளர்கள், போலீசார் தலையீடு இருப்பதில்லை. பல ஆண்டுகளாக இருந்த இந்த நடைமுறையில் தற்போது மாற்றம் கொண்டு வந்துள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

கட்டணமில்லா தரிசனம்

இதுகுறித்து இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில பொருளாளர் ஆதிசேஷன் கூறும்போது, மீனாட்சி அம்மன் கோவிலில் அதிகாலையில் 5 மணி முதல் 5.30 மணி வரை தர்ம தரிசனம் (கட்டணமில்லா தரிசனம்) பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தரிசன வரிசை முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு கிழக்கு வாசல் வழியாக ஒரே ஒரு வரிசையில்தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தரிசன நேரம்

மேற்கு கோபுரத்தில் இருந்து வரும் கட்டண தரிசன வரிசை 5.30 மணி வரை காலியாகவே உள்ளது. முன்பு அந்த வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் வழியாக பக்தர்களை அனுமதிப்பதில்லை. ஒரே வரிசையில் ஏராளமான பக்தர்கள் வருவதால் தரிசன நேரம் அதிகமாகிறது. எனவே வழக்கம் போல் இரண்டு வரிசைகளிலும் காலை 5 மணி முதல் 6 மணி வரை பக்தர்களை தர்ம தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com