

ஜோலார்பேட்டை,
ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய ரெயில்வே யார்டான ஜோலார்பேட்டையில் ஏற்பட்ட ஊழியர்களின் அலட்சியத்தால், இன்ஜின் இல்லாத 7 ரெயில் பெட்டிகள் 6 கிலோமீட்டர் தூரம் ஓடி தடம் புரண்ட சம்பவம் ஒட்டுமொத்த ரெயில்வே துறையையும் உலுக்கியுள்ளது. கேட் கீப்பரின் மின்னல் வேக சாதுரியத்தால், சென்னை - பெங்களூரு வழித்தடத்தில் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர் நூலிழையில் காப்பாற்றப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்திப்பு 16 ரெயில் பாதைகளை கொண்ட மிக முக்கிய ரெயில்வே மையமாகும். இங்குள்ள பெட்டி பராமரிப்பு யார்டில் பழுதுபார்க்கும் பணிக்காக 7 காலி ரெயில் பெட்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த பெட்டிகளை ஒரு இன்ஜின் மூலம் தள்ளி வேறு பகுதிக்கு மாற்றும் பணி நடைபெற்றது. அப்போது, பணியில் இருந்த ஊழியர்கள் அந்த பெட்டிகளை முறையாக கட்டுப்படுத்தாமலும், சக்கரங்களில் பாதுகாப்பு பிடிப்பான்கள் (Safety Clamps) மாட்டி நிலைநிறுத்தாமலும் அலட்சியத்துடன் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
7 காலி பெட்டிகளும், தண்டவாளத்தின் உருள தொடங்கின. யார்டின் எல்லைகளை கடந்த அந்த பெட்டிகள், பெங்களூரு - ஜோலார்பேட்டை பிரதான ரெயில் பாதையில் இன்ஜின் இல்லாமலேயே அசுர வேகத்தில் பாய்ந்தன.
சுமார் 6 கிலோமீட்டர் தூரம் தறிகெட்டு ஓடிய அந்த பெட்டிகள், இறுதியாக தமலேரி முத்தூர் என்ற பகுதிக்கு அருகே வந்தபோது பயங்கர சத்தத்துடன் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டு நின்றன.
பெட்டிகள் தடம் புரண்டபோது ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு, அங்கு பணியில் இருந்த ரெயில்வே கேட் கீப்பர் அதிர்ச்சியடைந்தார். ஆபத்தை உணர்ந்த அவர், ஒரு நொடி கூட தாமதிக்காமல் உடனடியாக ஜோலார்பேட்டை ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு அவசர தகவல் கொடுத்தார்.
சென்னை - பெங்களூரு வழித்தடத்தில் வந்துகொண்டிருந்த அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே அவசர அவசரமாக நிறுத்தப்பட்டன. கேட் கீப்பரின் இந்த துரித நடவடிக்கையால் ரெயில் மோதல் விபத்து தடுத்து நிறுத்தப்பட்டது.
தகவலறிந்து ரெயில்வே பொறியாளர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தண்டவாளத்தை நின்ற பெட்டிகளை அகற்ற போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கேஸ்-கட்டிங் கருவிகள் மூலம் பெட்டிகளின் இரும்பு இணைப்புகள் துண்டித்து பிரிக்கப்பட்டன. பின்னர், ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, தடம் புரண்ட பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன.
இந்த சம்பவம் பெங்களூரு-சென்னை வழித்தடத்தில் இயங்கும் பல ரெயில்களை பாதித்தது. இதன் விளைவாக, அவற்றின் திட்டமிடப்பட்ட சேவைகளில் தாமதங்கள் ஏற்பட்டன மற்றும் பயணிகள் போக்குவரத்தில் இடையூறு உண்டானது.