வரும் கோடையில் தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்படும்! - மின்வாரியம் தகவல்

தினமும் 7,971 மெகாவாட் வரை பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
மின்வாரியம் தகவல்
Published on: 

சென்னை,

தமிழகத்தில் வரும் 2027-ம் ஆண்டு கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்கும் நிலையில், தினமும் 3,610 மெகாவாட் முதல் 7,971 மெகாவாட் வரை மின் பற்றாக்குறை ஏற்படும் என மின்வாரியம் மதிப்பீடு செய்துள்ளது.

கோடையில் மின் தேவை புதிய உச்சத்தை எட்டும்

தமிழகத்தின் தினசரி சராசரி மின் தேவை சுமார் 16,000 மெகாவாட்டாக உள்ளது. கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால், மின் தேவை 20,000 மெகாவாட்டைக் கடக்கிறது.

இந்த ஆண்டு கோடை காலத்தில் மின் தேவை 21,000 மெகாவாட்டாக அதிகரித்தது. கடந்த ஜூலை 14-ம் தேதி மின் தேவை 21,714 மெகாவாட்டாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது.

கோடை காலம் முடிந்த பின்னரும் கடந்த மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், தினசரி மின் தேவை 20,500 மெகாவாட்டாக நீடித்தது.

2,000 மெகாவாட் மின் பற்றாக்குறை

அதிகரித்த மின் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான அளவுக்கு மின்சாரம் கிடைக்காததால், சுமார் 2,000 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து, மின்வாரியம் வெளிச்சந்தையில் குறுகிய கால அடிப்படையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்தது.

அப்போது ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.35 வரை இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

23,672 மெகாவாட்டாக மின் தேவை உயரும்

இந்த நிலையில், வரும் 2027-ம் ஆண்டு கோடை காலத்தில் தமிழகத்தின் மின் தேவை 23,672 மெகாவாட்டாக அதிகரிக்கும் என மின்வாரியம் கணித்துள்ளது.

குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் மின் பயன்பாடு உச்சத்தை எட்டும். அந்த நேரங்களில் மின் தேவைக்கும் கிடைக்கும் மின்சாரத்துக்கும் இடையே தினமும் 3,610 மெகாவாட் முதல் 7,971 மெகாவாட் வரை பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மின்சாரம் கொள்முதல் செய்யத் திட்டம்

எதிர்பார்க்கப்படும் மின் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில், குறுகிய கால ஒப்பந்தங்களின் கீழ் 3,200 மெகாவாட் மின்சாரத்தையும், நீண்ட கால அடிப்படையில் 1,500 மெகாவாட் மின்சாரத்தையும் கொள்முதல் செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

குறுகிய கால மின்சாரக் கொள்முதல் என்பது ஒரு நாள் முதல் ஓராண்டு வரையிலான ஒப்பந்தங்களைக் குறிக்கும். நீண்ட கால ஒப்பந்தங்கள் என்பது 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரையிலான கால அளவைக் கொண்டதாகும்.

வரும் கோடை காலத்தில் அதிகரிக்கக்கூடிய மின் தேவையைச் சமாளித்து, தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்கான முன்னேற்பாடுகளில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com