‘த.வெ.க. ஆட்சியில் பேருந்து வசதி இல்லாத கிராமங்களே இருக்காது..’ - வேலூரில் விஜய் அறிவித்த வாக்குறுதிகள்

தமிழகத்தில் நடக்கப்போவது விசில் புரட்சி தேர்தல் என விஜய் தெரிவித்தார்.
‘த.வெ.க. ஆட்சியில் பேருந்து வசதி இல்லாத கிராமங்களே இருக்காது..’ - வேலூரில் விஜய் அறிவித்த வாக்குறுதிகள்
Published on

வேலூர்,

வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் இன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சி நிர்வாகிகளின் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது அங்கிருந்தவர்களிடம் முரட்டு ஜல்லிக்கட்டு காளை பற்றி குட்டிக் கதை ஒன்றை கூறிய விஜய், ‘சிறியவன், அனுபவம் இல்லாதவன் என்று எதுவுமே கிடையாது. பிரச்சினையை எப்படி தீர்க்கிறோம் என்பதுதான் முக்கியம்’ என்றார்.

மேலும், தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று குற்றம்சாட்டிய விஜய், சட்டம்-ஒழுங்கு காணாமல் போய் ரொம்ப நாளாகிவிட்டது என்று கூறினார். தீய சக்தியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றால், தேர்தலில் விசில் சின்னம் அருகே உள்ள பட்டனை அழுத்த வேண்டும் என்று தெரிவித்த விஜய், தமிழகத்தில் நடக்கப்போவது வித்தியாசமான விசில் புரட்சி தேர்தல் என்று குறிப்பிட்டார்.

அதோடு விஜய், வேலூரில் இன்று பேசியபோது த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்போகும் வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதன்படி விஜய் கூறிய வாக்குறுதிகள் பின்வருமாறு;-

“* த.வெ.க ஆட்சியில் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் முதலிடத்தில் இருக்கும்.

* அரசு பள்ளிகள், கல்லூரிகளின் தரம் முதல் இடத்தில் இருக்கும்.

* கல்வி நிலையங்களில் கதவுகள், பொருத்தப்பட்ட தரமான கழிவறைகள் அமைக்கப்படும்.

* உயர்நிலைக் கல்வியில் அரசியல் சாசனம் தொடர்பான விளக்கங்கள் இருக்கும்.

* போட்டித் தேர்வுகளுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டம் மாற்றப்படும்.

* போட்டித் தேர்வுகளுக்கு லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டியிருக்காது

* மாவட்ட எஸ்.பி-க்கள் மற்றும் கலெக்டர்களில் பெண்களுக்கு சமபாதி வாய்ப்பு வழங்கப்படும்.

* த.வெ.க ஆட்சியில் பேருந்து வசதி இல்லாத கிராமங்களே இருக்காது.

* ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களுக்கு தனியாக தொழிலாளர் வாரியம் அமைக்கப்படும்.

* போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கப்படும்.

* குடும்ப நலன்களை காக்க தனியாக நலவாரியம் அமைக்கப்படும்.

* தேவையான பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com