

ராமநாதபுரம்,
போதிய மழை இன்றி சீதோசன நிலை மாறியதால் தேர்த்தங்கல் சரணாலயத்தில் இருந்து பறவைகள் திரும்பிச்சென்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தங்கல், சக்கரக்கோட்டை, கீழச்செல்வனூர் மேலசெல்வனூர், காஞ்சிரங்குளம், சித்திரங்குடி என 5 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையை நம்பி ஏராளமான பறவைகள் வருவது வழக்கம். இவ்வாறு இரைதேடி வரும் பறவைகள் முட்டையிட்டு குஞ்சுபொரித்து மீண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் சீசன் முடிந்ததும் திரும்பி சென்றுவிடும்.
இந்த நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள நயினார்கோவில் செல்லும் சாலையிலுள்ள தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் ஏராளமான பறவைகள் வந்து குவிந்தன. இந்த பறவைகள் சரணாலய பகுதி, சுற்றுவட்டாரங்களில் சுற்றித்திரிந்து இரைதேடி வந்தன. இந்நிலையில் சரணாலயத்தை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆங்காங்கே சிறு குட்டை போல் தேங்கியுள்ள தண்ணீரில் உள்ள இரைகளை பறவைகள் தின்று வாழ்ந்து வந்தன. தற்போது சீதோசன நிலை காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்யாத தோடு வெயில் சுட்டெரித்து வருகிறது.
இதனால் தேர்த்தங்கல் சரணாலயத்தில் உள்ள பறவைகள் சீதோசன மாற்றம் காரணமாக அங்கிருந்து படிப்படியாக வெளியேற தொடங்கின. ஓரிரு நாளில் முற்றிலுமாக அனைத்து பறவைகளும் சரணாலயத்தில் இருந்து வெளியேறி மாற்று இடத்தை நோக்கி சென்றுவிட்டன. கடந்தாண்டுகளில் இந்த சமயத்தில் பறவைகளின் ரீங்காரத்துடன் ரம்மியமாக காட்சியளித்த நிலை மாறி தற்போது மயான அமைதியாக காட்சியளிக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில பறவைகள் கூட பறந்து செல்லாத நிலை உள்ளதோடு அனைத்து மரங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. தீபாவளி அன்று பறவைகளுக்காக தங்களின் பட்டாசு வெடிக்கும் மகிழ்ச்சியை தியாகம் செய்த கிராம மக்கள் பறவைகள் திரும்பி சென்ற நிலையில் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். மீண்டும் மழை பெய்து சரணாலயத்தை நோக்கி பறவைகள் வந்து வாழ்வியலை தொடங்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.