தேவர் குருபூஜை விழா: அக்டோபர் 30-ந்தேதி பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமி மரியாதை!

'தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்' என்று பிரகடனப்படுத்தி, தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த, பல்வேறு சிறப்புகளுக்குரிய உன்னதத் தலைவராம்.
எடப்பாடி பழனிசாமி
Published on: 

சென்னை,

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்த நாள் மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, அக்டோபர் 30-ந்தேதி பசும்பொன் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இதனை அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி மரியாதை

இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

'தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்' என்று பிரகடனப்படுத்தி, தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த, பல்வேறு சிறப்புகளுக்குரிய உன்னதத் தலைவராம், போற்றுதலுக்குரிய தேவர் திருமகனாரின் 119-ஆவது பிறந்த நாள் மற்றும் 64-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு 30.10.2026 வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் நினைவிடத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து, தலைமைக் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்த உள்ளனர்.

அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அழைப்பு

இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள்; புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாக வருகை தந்து தேவர் திருமகனாருக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com