'ஆன்மிகத்தில் இருந்து திருக்குறளை பிரிக்கப் பார்க்கிறார்கள்' - கவர்னர் ஆர்.என்.ரவி

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் தர்மம் என்பது ஒன்றுதான் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
'ஆன்மிகத்தில் இருந்து திருக்குறளை பிரிக்கப் பார்க்கிறார்கள்' - கவர்னர் ஆர்.என்.ரவி
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டம் முசிறி அருகே குணசீலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜகோபுரம், கருடமண்டபம் மற்றும் பிரகார மண்டபம் ஆகியவற்றை கருங்கல்லால் சிற்ப சாஸ்திர முறைப்படி, உன்னதமாகவும், கலைஅம்சத்துடனும் புனரமைக்கவும், பக்தர்கள் தங்குவதற்கான யாத்ரீகர்கள் தங்கும் விடுதி, அன்னதான கூடம், கல்யாண மண்டபம், சேவார்த்தி மண்டபம், கோசாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகளை மேற்கொள்ள பரம்பரை அறங்காவலர்கள் குழு முடிவு செய்தது.

இதனை தொடர்ந்து வரைபடம் மற்றும் மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்தநிலையில் ராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபத்துக்கு கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் கே.ஆர்.பிச்சுமணி அய்யங்கார் எழுதிய குணசீல மஹாத்மியம், சென்னகரை சுப்பிரமணியன் எழுதிய வள்ளுவத்தில் மெய்ஞானம் ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு விழா நேற்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு புதிதாக கட்டப்படவுள்ள கோவிலின் 7 பிரகாரங்களை கொண்ட மாதிரி வடிவமைப்பினை திறந்து வைத்தார். பின்னர் அவர், ராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபம் கட்டுமான பணிக்கான அடிக்கல்லை நாட்டினார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் யதுகிரி யதிராஜமடம் 41-ம் பட்டம் பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ யதிராஜா நாராயண ராமானுஜ ஜீயர் முன்னிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி நூல்களை வெளியிட, அதனை தினமலர் ஆசிரியர் ஆர்.ராமசுப்பு பெற்றுக் கொண்டார். பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

"மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், தர்மம் என்பது ஒன்று தான். அது சனாதன தர்மம் மட்டும் தான். பாரதம், ராஷ்ரியம், தர்மம் ஆகியவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. அவை ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளன. சமூகமும், தர்மமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.

திருக்குறள் ஒரு ஆன்மிக புத்தகம். முக்தி பற்றி பேசவில்லை என்று கூறி, சில அரசியல் சிந்தனையாளர்கள் ஆன்மிகத்தில் இருந்து திருக்குறளை பிரிக்கப் பார்க்கிறார்கள். நாம் யார் என்பதை இன்றைக்கு வெளியிட்ட புத்தகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அத்தகைய சிந்தனையை நமக்கு கல்வி பாடத்திட்டங்கள் கொடுக்கவில்லை. பாரத தேசம் ஒரு ஆன்மிக தேசம். சனாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர்."

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com