

ஒரு வீட்டில் மகனுக்கு அல்லது மகளுக்கு திருமணத் தேதி முடிவானால் போதும், அடுத்த முதல் வேலை கல்யாண கடிதாசி அச்சடிப்பதுதான். பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, மாமா, மச்சான் என்று உறவுகளின் பெயர்களை அச்சிடுவது. அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு பழங்களுடன் நேரில் போய் அழைப்பிதழைக் கொடுப்பது.
அப்போது பேசாத உறவினர்கூட 'சரி.. அவன் நேரில் வந்து அழைத்துவிட்டான். கடிதாசிலும் பெயர் போட்டுவிட்டான்' என்று பழைய பகையை மறந்து விழாவுக்கு நேரில் வந்து வாழ்த்துவது என்று சுமுகமாக உறவுகளைப் புதுப்பிக்கும் விழாவாகத்தான் சமூகத்தில் திருமண விழாக்கள் பார்க்கப்பட்டன.
மாறிக்கொண்ட மக்கள்
இவ்வாறு நேரில் பார்த்து அழைப்பிதழை பூ பழத்துடன், வெற்றிலை, பாக்கு, குங்குமம் கொடுத்து உறவினர்களை 'கண்டிப்பா வந்துடுங்க...' என உரிமையுடன் அழைப்பது நமது மரபும் கூட.
ஆனால், இன்றைக்கு எல்லாமே மாறிவிட்டது. மாறி வரும் சூழலுக்கேற்பவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்பவும் மக்களும் மாறிவிட்டார்கள்.
எந்த ஒரு விழாவாக இருந்தாலும் 'வாட்ஸ்-அப்', 'பேஸ்புக்' போன்ற சமூக வலைத்தளங்களில் அழைப்பிதழை அனுப்பி வைத்துவிட்டு அமைதியாக இருந்து விடுகிறார்கள்.
மாறி வரும் இந்த கலாசாரம் பற்றிய பொதுமக்கள் கருத்து என்னவாக இருக்கிறது என்று பார்க்கலாம்.
வரவேற்கத்தக்கது
கரூர் வையாபுரி நகரை சேர்ந்த மோகன்:-
கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் போன்ற கொங்கு மண்டலங்களை பொறுத்தவரை வீட்டில் நடைபெறும் திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளுக்கு நேரில் சென்று பத்திரிக்கை வைத்து அழைப்பது தான் இன்றுவரை வழக்கத்தில் உள்ளது. இதைத்தான் மரியாதையாக நினைத்து வருகிறோம். அதை கடைபிடித்து வருகிறோம். ஆனால் காலத்தின் கட்டாயமாக தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சென்னை, பெங்களரு, டெல்லி உள்பட பல்வேறு வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் உறவினர்கள், நண்பர்களுக்கு நேரில் சென்று பத்திரிக்கை கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது.
இதனால் இ-மெயில் மூலமோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ பத்திரிக்கை அனுப்பி வைத்துவிட்டு தகவல் கொடுக்கிறோம். அவர்களும் முடிந்தால் நேரில் வருகிறார்கள். முடியவில்லை என்றால் ஜிபே, பே.டி.எம். மூலம் மொய் பணத்தை அனுப்பி வைக்கும் சூழல் இருக்கிறது. மேலும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை லைவாக வீடியோ மூலம் பார்க்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களை வெளியூர் மற்றும் வெளிநாட்டில் இருப்பவர்கள் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. இதனால் தொழில்நுட்பம் என்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான்
பரிணாம வளர்ச்சியை காட்டுகிறது
கரூர் காளியப்பனூரை சேர்ந்த சென்சியா:-
நாங்கள் குடும்பத்துடன் காளியப்பனூரில் வசித்து வருகிறோம். எங்களுடைய உறவினர்கள் அனைவரும் பக்கத்து கிராமத்தில் இருக்கிறார்கள். அவர்கள் இல்லங்களில் நடைபெறும் திருமணம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு நேரில் வந்து பத்திரிக்கை வைத்து அழைப்பது வழக்கம். ஆனால் வெளியூரில் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் வாட்ஸ்-ஆப் மூலம் அழைப்பிதழ்களை அனுப்பி போனில் தகவல் சொல்கிறார்கள். நேரில் செல்ல இயலாத போது நாங்களும் ஜிபே மூலம் மொய் அனுப்பி வைக்கிறோம். இது காலத்தின் பரிணாம வளர்ச்சி. இதற்கு முன் அழைப்பிதழ்களை தபாலில் அனுப்பினார்கள். நேரில் செல்ல இயலாதவர்கள் தபால் நிலையம் சென்று மணியார்டர் மூலம் மொய்ப்பணம் அனுப்பி வைத்தனர். கால மாற்றத்தின் சூழ்நிலையால் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை நடைபெறுகிறது. ஆனாலும் உறவினர்கள் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்துடன் நேரில் சென்று அக்கா, தம்பி, அண்ணன், சித்தப்பா, தாத்தா உள்ளிட்ட உறவுமுறைகளோடு மகிழ்ச்சியுடன் பேசி சந்தோசமாக இருக்கின்ற தருணத்தின்பாது அதனுடைய மன மகிழ்ச்சியே வேறு விதமாக இருக்கும். இதுதான் நமது தமிழர்களின் பண்பாடு ஆகும். நேரில் சென்றால் தான் உறவுகள் மேம்படும்.
உறவினர்களின் நெருக்கத்தை குறைக்கும்
குளித்தலையை சேர்ந்த லட்சுமணன்:-
நமது வீட்டில் நடைபெறும் திருமணம், காதணி விழா போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு பத்திரிக்கை அடித்து உறவினர்கள் பெயரை அதில் இடம்பெற செய்து அவர்களது வீட்டிற்கு தேடிச்சென்று அந்த பத்திரிகையை அவர்களுக்கு வழங்குவது நமது தமிழர் பண்பாடாக இருந்தது. அப்போதுதான் உறவினர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் சற்று மனம் திறந்து பேசி விட்டு வருவோம். இணையதளத்தின் பயன்பாடு முக்கியத்துவம் என்றாலும் தற்போது வீட்டு விசேஷங்களுக்கான பத்திரிகைகளை வாட்ஸ் அப், முகநூல் போன்றவற்றில் பகிர்வது நடைமுறைக்கு வந்து விட்டது. இது உறவினர்களுடான நெருக்கத்தை குறைத்து விடுகிறது.
முழுமையாக பயன்படுத்த வேண்டும்
தோகைமலை காவல்காரன்பட்டியை சாந்த செல்வராஜ்:-
நான் வியாபாரத்திற்காக தோகமலை சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் வெளியூர் சென்றாலும் பொதுமக்களிடம் பணப்புழக்கம் குறைந்தே காணப்படுகிறது. இதனால் 60 சதவீதம் பேர் ஜிபே, போன்பே மூலமாக பணம் செலுத்தி வருகின்றனர். தற்போது புதியதாக திருமண நிகழ்ச்சி, காதணி விழா போன்றவற்றிற்கு வரும் பலர் ரூ.500, ரூ.1000, ரூ.2000 என தங்களது மொய் பணத்தை போன்பே போன்றவற்றின் மூலம் செலுத்தி வருகின்றனர். இதனால் திருடர்களிடம் இருந்து பணத்தை காப்பாற்றுவதற்கு இந்த செயல்முறை மிகவும் பயன்பாடாக உள்ளது. இந்த முறையை முழுமையாக பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.
கால மாற்றத்தால் நடக்கிறது
வெள்ளியணை மருதம்பட்டி காலனியை சேர்ந்த பார்த்திபன்:-
திருமணம் என்பது உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து விருந்து வைத்து நடைபெறுவதாகும். முன்பெல்லாம் இந்த திருமணத்திற்கு முதல் நாளே வந்திருந்து திருமணத்துக்குரிய வேலைகளை உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் பகிர்ந்து செய்து வந்தார்கள். இன்றைய காலகட்டத்தில் அனைவருடைய வாழ்க்கையிலும் பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால் முகூர்த்த நேரத்திற்கு மட்டுமே வந்து வாழ்த்தி செல்கிறார்கள். திருமண அழைப்பிதழை தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு முன்பெல்லாம் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வந்தார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் உள்ளூரிலேயே அனைவரும் இல்லாமல் வேலை நிமித்தமாக பல்வேறு இடங்களில் தங்கி வேலை செய்வதால் உடன் வேலை செய்பவர்களும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறார்கள்.
அப்படி உண்டாகும் நட்பு அவர்கள் வேறு இடங்களுக்கு பணி மாறுதல் பெற்று சென்றாலும் தொடர்கிறது. இதனால் அழைப்பிதழை தொலைதூரத்தில் உள்ள நண்பர்களுக்கு நேரில் சென்று வழங்க முடியாத சூழ்நிலையில் செல்போன் மூலம் தகவல் தெரிவித்து, அழைப்பிதழை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்கிறார்கள். அவ்வாறு அழைப்பிதழ் பெற்ற நண்பர்கள் பணி நிமித்தமாக விடுமுறை எடுத்து திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் வாட்ஸ்-அப்பிலே வாழ்த்து தெரிவித்து, கூகுள்பே மூலம் மொய் செய்கிறார்கள். கால மாற்றத்தில் இப்படி மாறிப்போன திருமண அழைப்பு வருங்காலங்களில் என்னென்ன மாற்றங்களை சந்திக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பெரியோர்கள் ஆலோசனை வழங்கலாம்
பாலத்துறை பகுதியை சேர்ந்த பேபி:-
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்டவை பயன்பாட்டில் இல்லாத நேரத்தில் மகன்கள், மகள்களுக்கு திருமணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா உள்ளிட்ட பல்வேறு வகையான விசேஷங்களுக்கும் உறவினர்கள், நண்பர்கள், மற்றும் பழக்கத்தில் உள்ளவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று அழைப்பிதழ்களை வழங்கி விழாவிற்கு வரவழைத்தோம். தற்காலங்களில் எந்த விசேஷமாக இருந்தாலும் அந்த பத்திரிகையை ஸ்கேன் செய்து உறவினர்கள், நண்பர்கள், பழக்கதில் இருப்பவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைத்து அவர்களை அழைப்பது தற்காலங்களில் வாடிக்கையாகிவிட்டது.தாங்கள் விசேஷங்களுக்கு போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு போன் பே மூலம் மொய்த்தொகையை அனுப்புவதும் வாடிக்கையாகிவிட்டது. இதனால் உறவினர்களுக்கும், நமக்கும் நேரடியான உறவுமுறையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்காலங்களில் மிக முக்கியமான நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே நேரடியாக அழைப்பிதழ்களை வழங்கி வருகின்றனர். இது தொடர்கதையாக மாறினால் உறவு முறையில் தொடர்பு குறைந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். எனவே உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் விசேஷங்களின்போது அழைப்பிதழ்களை நேரடியாக கொண்டு சென்று அவர்களை அழைப்பதே தமிழர்களின் தலையாய கடமையாக இருந்து வருகிறது. அதை முன்னோர்கள் மறக்கவில்லை. தற்போதைய இளைஞர்கள் மறந்து விட்டார்கள். எனவே நேரடியான அழைப்புகள் கொடுப்பதையும், மொய் வைப்பதையும் தொடர குடும்ப பெரியோர்கள் ஆலோசனை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
மக்கள் கருத்து என்ன?
திருமண அழைப்பிதழ் மட்டுமின்றி, நிச்சயதார்த்தம், காதணி விழா, புதுமனைப் புகுவிழா, மஞ்சள் நீராட்டு, குழந்தைகள் பெயர் சூட்டுவிழா, அலுவலக திறப்பு விழா, பழைய நண்பர்கள் ஒன்றுகூடும் விழா என்பன உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்கும் அழைப்பிதழ்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்கள் மூலமாக நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பப்படுகின்றன. மொத்தத்தில், சமூக வலைதளங்களில் திருமண அழைப்பிதழ் அனுப்பும் போக்கை கைவிட வேண்டும் என்றும், அது கலாசார சீரழிவுகளுக்கு வழிவகுத்து விடும் என்றும் மக்கள் கருதுகின்றனர். இளைய தலைமுறையினர் இதனை பின்பற்றலாமே.