ஜனநாயகன் தணிக்கை சான்று வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு


ஜனநாயகன் தணிக்கை சான்று வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 20 Jan 2026 3:08 PM IST (Updated: 20 Jan 2026 5:01 PM IST)
t-max-icont-min-icon

மறுஆய்வு குழுவானது, விண்ணப்பித்த 20 நாளில் அமைக்கப்படும் என்று தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது.

சென்னை,

ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்புக்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பை எதிர்த்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று (செவ்வாய் கிழமை) சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சதீஸ் பராசரன், பிரதீப் ராய் ஆஜரானார்கள், சென்சார் போர்டு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜரானார்.

சென்சார் போர்டு வாதிடுகையில் கூறப்பட்டதாவது:-

சினிமோட்டோகிராபி சட்டப்படியும், விதிகளின்படியும் 72 நிமிடங்களுக்கு மேல் நீளமான படமாக இருந்தால் சென்சார் போர்டு தலைவர்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும் . இந்த வழக்கில் சென்சார் போர்டு பதிலளிக்க தனி நீதிபதி குறைந்தபட்ச கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும்.

படத்தை 9ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், ரூ.500 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் கூறி உடனடி நிவாரணம் கோர முடியாது. படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து தணிக்கை வாரியம்தான் இறுதி முடிவு அறிவிக்கும். மண்டல அலுவலகத்தில் உள்ள ஆய்வுக் குழுவின் முடிவுகள், தணிக்கை வாரியத்தை கட்டுப்படுத்தாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக சென்சார் போர்டில் யார் படத்தைப் பார்த்தார்கள்? சட்டப்படி படத்தை பார்த்து ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “படத்தைப் பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழுதான் படத்தை பார்த்துள்ளது” என்று சென்சார் போர்டு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து மண்டல அலுவலர் படத்தைப் பார்த்தாரா? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு சென்சார் போர்டு தரப்பில், “அவர் படத்தைப் பார்க்கவில்லை, குழுவால் மட்டுமே பார்க்கப்பட்டது. மேலும் சினிமாட்டோகிராப் விதிகளின்படி, வாரியமே ஒரு படத்தைப் பார்த்து சான்றிதழைப் பரிந்துரைக்கலாம் அல்லது படத்தைப் பார்க்கும் பணியை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பலாம் . ஜனநாயகன் படம் தொடர்பாக புகார் வந்ததால் மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. படத்தில் 14 காட்சிகளை நீக்க வேண்டும்.

அதன்பின் படத்தை மீண்டும் பார்த்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 14 காட்சிகளை நீக்கி விட்டதால் சென்சார் சான்று வழங்கக் கோரினார்கள். கடந்த 6ம் தேதி இந்த வழக்கு தொடரும் போதே, இந்த படம் மறு ஆய்வு கமிட்டிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது என்பது பட நிறுவனத்துக்கு தெரியும். ஆனால் அவர்கள் அதை எதிர்த்து வழக்கு தொடரவில்லை ” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், உணவு இடைவேளை முடிந்து மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. அப்போது ஒருவர் வாரியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும், வாரியம் ஆய்வு செய்த பிறகு ஒப்புதல் அளிக்கும். அதன் பிறகுதான் அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்சார் போர்ட்டு தரப்பில் வாதிடப்பட்டது. சென்சார் சான்று வழங்க பின்பற்றப்படும் நடைமுறைகளை சினிமாட்டோகிராப் சட்ட விதிகளை மேற்கோள்காட்டி வாதம் முன்வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மறு ஆய்வுக்குழு எத்தனை நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஜனநாயகன் திரைப்படம் மறுஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இல்லாவிட்டால் படம் மறுஆய்வு செய்யப்பட்டிருக்கும். மறுஆய்வு குழுவானது, விண்ணப்பித்த 20 நாளில் அமைக்கப்படும். இக்குழு சான்று வழங்க மறுத்தால் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என வாதிட்டார்.

தொடர்ந்து ஜனநாயகன் படத்திற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக எந்த தகவலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கவில்லை. தனி நீதிபதியின் உத்தரவில் எந்த தவறும் இல்லை. வாரிய தலைவரின் உத்தரவு எங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை, தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

படத்திற்கு எதிராக புகார் யாரிடம் கிடைத்தது ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு மும்பையில் உள்ள சென்சார் போர்டு தலைவரிடம் புகார் கிடைத்தது; சான்றிதழ் கொடுக்கும் வரை புகார் கொடுத்தது யார் என்பதை படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரிவிக்ககூடாது என்று சென்சார் போர்டு பதில் அளித்தது.

தொடர்ந்து சென்சார் தொடர்பான அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. டிசம்பர் 29-க்கு பிறகு தணிக்கை சான்று விவகாரத்தில் அனைத்தும் மறைக்கப்பட்டது. எதிலும் வெளிப்படைத் தன்மை இல்லை என படத்தயாரிப்பு நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

படத்தை பார்வையிட்டக் குழுவினர் ஒரு மனதாக சான்று வழங்க பரிந்துரைத்தனர்; படத்தைப் பார்த்து முடித்ததும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து பரிந்துரை வழங்க வேண்டும்; மாறாக வீட்டுக்கு சென்றுவிட்டு நான்கு நாட்களுக்குப்பின் புகார் அளிக்க முடியாது என பட தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது.

தொடர்ந்து அவர்கள் சொன்ன காட்சிகளை நீக்கினோம்; ஆனால் அதன் பிறகும் நீக்கப்பட்ட அந்தக் காட்சிகளை புகாரால் கூறியுள்ளார்கள். தணிக்கை குழுவின் நடவடிக்கையால் படதயாரிப்பு நிறுவனத்திற்கு தேவையற்ற மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டப்படி படத்தை வெளியிடாததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என பட தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது.

அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், சென்சார் போர்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விரிவான உத்தரவு எங்கே?.. உத்தரவு இல்லாமல் எப்படி வழக்கு தொடர முடியும்? என கேள்வி எழுப்பினர். அதனை தொடர்ந்து இருதரப்பும் பரஸ்பர வாதங்களை முன்வைத்தன. இறுதியில் தணிக்கை சான்று தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. தொடர்ந்து ஒரேநாளில் நடைமுறைகளை முடித்து உத்தரவு வழங்க வேண்டும் என தணிக்கை வாரியம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க முடியாது என கூறிய நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

1 More update

Next Story