திருட்டு போன மாடுகளை மீட்டுத் தரக் கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகை

வந்தவாசி அருகே திருட்டு போன மாடுகளை மீட்டுத்தரக்கோரி கிராம மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருட்டு போன மாடுகளை மீட்டுத் தரக் கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகை
Published on

வந்தவாசி

வந்தவாசி அருகே திருட்டு போன மாடுகளை மீட்டுத்தரக்கோரி கிராம மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாடுகள் தொடர் திருட்டு

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட வெண்மந்தை, எட்டிக்குட்டை, புன்னை, சூரியகுப்பம், ரங்கராஜபுரம், ஓசூர், மழவங்கரணை உள்பட பல்வேறு கிராமங்களில் கடந்த சில மாதங்களாக விவசாய நிலங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தன.

இது தொடர்பாக சுமார் 60-க்கும் மேற்பட்ட மாடுகள் திருடு போனதாக 15-க்கும் மேற்பட்டோர் கீழ்க்கொடுங்காலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் எட்டிக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ரமேஷ், ஜெயபால் ஆகியோரின் நிலங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த 2 பசுமாடுகள் மற்றும் ஒரு கன்றுக் குட்டியை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து புதன்கிழமை அதிகாலை இருவருக்கும் தெரிய வரவே, இருவரும் காரில் சென்று தேடியுள்ளனர்.

அப்போது, இவர்களது மாடுகள் மற்றும் கன்றுக் குட்டியை அவலூர்பேட்டை சந்தையில் விற்பதற்காக மர்ம நபர்கள் மினிவேனில் ஏற்றிக் கொண்டு வந்தவாசி-சேத்பட் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

இதுகுறித்து இருவரும் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற கீழ்க்கொடுங்காலூர் போலீசார், சேத்பட்டு அருகே சென்று கொண்டிருந்த மினிசரக்கு வாகனத்தை மடக்கி மாடுகள் மற்றும் கன்றுக் குட்டியை மீட்டனர்.அப்போது மினிவேனிலிருந்த கீழ்வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆனந்தன் (வயது 27) தப்பியோடிவிட்டார்.அந்த வேனை ஓட்டி வந்த தென்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் ஜோதி (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மினிசரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

முற்றுகை

இது குறித்து தகவலறிந்த ஏற்கனவே மாடுகள் திருடு போனதாக புகார் அளித்த விவசாயிகள் கீழ்க்கொடுங்காலூர் காவல் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது திருடு போன தங்களது மாடுகளையும் உடனடியாக கண்டுபிடித்து தருமாறு அவர்கள் கோரினர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

அவலூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மாட்டுச் சந்தை நடைபெறும் மதல்நாள் நள்ளிரவு மர்ம நபர்கள் மாடுகளை திருடுகின்றனர். திருடிய மாடுகளை வாகனத்தில் எடுத்துச் சென்று மாட்டுச் சந்தையில் விற்று விடுகின்றனர்.மாடுகள் திருட்டு போனது எங்களுக்கு காலை தெரிய வருவதற்குள் அவை வேறு ஒருவருக்கு விற்கப்பட்டு விடுகிறது.

எனவே மாட்டுச் சந்தைகளை போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த விஷயத்தில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து எங்கள் மாடுகளை மீட்டுத் தர வேண்டும் என்றனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கீழ்க்கொடுங்காலூர் போலீசார் சமரசம் செய்ததை அடுத்து விவசாயிகள் புறப்பட்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com