‘‘என் பேச்சை தவறாக சித்தரித்து விட்டனர்’’; ஆ.ராசா எம்.பி. விளக்கம்

முதல்-அமைச்சர் குறித்து நான் பேசியதை தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் உலவ விட்டுள்ளனர் என்று ஆ.ராசா எம்.பி. விளக்கம் அளித்துள்ளார்.
‘‘என் பேச்சை தவறாக சித்தரித்து விட்டனர்’’; ஆ.ராசா எம்.பி. விளக்கம்
Published on

பெரம்பலூர்:

பேட்டி

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் நேற்று முன்தினம் தி.மு.க. வேட்பாளர் சிவசங்கரை ஆதரித்து, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரும், நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா பிரசாரம் செய்து பேசினார். அப்போது முதல்-அமைச்சர் குறித்து அவர் அவதூறாக பேசியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலாக பரவியது. இது தொடர்பாக அ.தி.மு.க. சார்பில், தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆ.ராசா எம்.பி. நேற்று பெரம்பலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் அரசியல் குழந்தைகளாக உருவகப்படுத்தி நான் பேசிய தேர்தல் பரப்புரை பேச்சுகளை தங்களுக்கு ஏற்றாற்போல் விரசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வேண்டும் என்றே சிலர் உலவ விட்டுள்ளனர்.

அவதூறாக பேசிவிட்டதாக சித்தரிப்பு

என்னுடைய பேச்சுகளுடைய சாரம் எங்களுடைய தலைவர் கட்சியில் படிப்படியாக வளர்ந்து தலைவராக வந்தார். ஆட்சியில் எம்.எல்.ஏ.வாக, மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதல்-அமைச்சராக என பரிணாம வளர்ச்சியை படிப்படியாக பெற்று முழுமை பெற்ற அரசியல் குழந்தை என்ற அடையாளத்தில் சொன்னேன்.

அதில் எடப்பாடி பழனிசாமியை ஒப்பிடுகிறபோது, அவர் நேர்வழியில் மக்களின் தீர்ப்பை பெற்று முதல்-அமைச்சராக வரவில்லை. குறுக்கு வழியில் வேறு விதமாக சசிகலாவின் காலை தொட்டு வந்தார் என்று இருவரையும் அரசியல் குழந்தையாக உவமைப்படுத்தி, உருவகப்படுத்தி நான் பேசிய பேச்சுகளுடைய இரண்டு, மூன்று வரிகளை மட்டும் ஒட்டியும், வெட்டியும் எடுத்து, நான் ஏதோ முதல்-அமைச்சரை அவதூறாக பேசி விட்டேன் என்று சித்தரிக்கப்படுகிறது.

ஆரோக்கியமற்ற குழந்தை

முதல்-அமைச்சரை அவதூறாக பேச வேண்டும் என்றோ, அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்றோ எந்த எண்ணமும் எனக்கு கிடையாது. நான் பேசியது எல்லாம் அரசியலில் அவர்களுக்குரிய உயரம், ஆளுமைக்கான ஒப்பீடு. இந்த 2 ஆளுமைகளுக்கான ஒப்பீட்டை 2 குழந்தைகளாக ஒன்று ஆரோக்கியமான குழந்தை, மற்றொன்று ஆரோக்கியமற்ற குழந்தை என்கிற பொருளில் பேசினேன்.

அதற்காக அந்த 2 வரியை மட்டும் வைத்துக்கொண்டு நான் ஏதோ முதல்-அமைச்சரை தனிப்பட்ட முறையில், அவரின் பிறப்பை கொச்சைப்படுத்தி விட்டேன் என்று பேசுவதுபோல் எடுத்து போடுவது முற்றிலும் தவறானது. எனக்கு அந்த எண்ணம் சிறிதும் இல்லை. அவ்வளவு தரக்குறைவாக நடந்து கொள்ள மாட்டேன்.

சட்டப்படி சந்திப்போம்

அப்படிப்பட்ட செய்தியை யாரும் நம்ப வேண்டாம். அரசியல் விமர்சனம் என்பது வேறு. முதல்-அமைச்சர் என்ற முறையில் நான் அவரை மதிக்கிறேன். அவரின் மாண்புக்கு எந்த சிறிய சேதாரம் தர வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பேசவில்லை. இது தொடர்பாக அ.தி.மு.க., தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்த புகாரினை நாங்கள் சட்டப்படி சந்திப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com