மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்துவிட்டு ரெயிலில் தப்பிச்சென்ற திருடன்: துரத்திப்பிடித்த போலீசார்

மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த திருடன் ரெயிலில் தப்பி சென்றார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆர்ப்பாக்கம் மந்தவெளி தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி ராணி (வயது64). இருவரும் சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் வீட்டு வாசலில் உள்ள மரக்கதவின் துவாரத்தின் வழியாக உள்பக்கம் போடப்பட்டிருந்த தாழ்ப்பாளை திறந்து, வீட்டின் உள்ளே புகுந்து, தூங்கி கொண்டிருந்த ராணியின் கழுத்தில் கிடந்த 6 கிராம் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து ராணி புதுப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்துச்சென்ற நபரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய நபர் நேற்று முன்தினம் மாலை காரைக்கால்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தப்பிச்செல்ல உள்ளதாக புதுப்பட்டினம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் கலையரசன், கயல்விழி, இதய பல்லவன், சிவராஜ் உள்ளிட்டோரை கொண்ட குழுவினர் அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து அவருடைய இருப்பிடத்தை அறிந்து, காரைக்கால் ரெயில் நிலையத்துக்கு சென்றனர்.
அதற்குள் ரெயில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயிலில் திருடன் தப்பி சென்றதை அறிந்த புதுப்பட்டினம் போலீசார், ரெயில்வே போலீசாரின் உதவியுடன் ரெயிலை தங்கள் வாகனத்தின் மூலம் துரத்தி சென்றனர். ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் திருடனை போலீசார் பிடிக்க முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. ஒருவழியாக குளித்தலை ரெயில் நிலையத்தில் இரவு 8.50 மணி அளவில் அந்த ரெயில் நின்று கொண்டிருந்தபோது, அந்த நபரை போலீசார் அதிரடியாக பிடித்து, புதுப்பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து கிடுக்கிப்படி விசாரணை நடத்தினர்.
இதில் அவர் ஆர்ப்பாக்கம் கிராமம் மந்தகரை தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (40) என்பதும், நகையை பறிகொடுத்த ராணியின் உறவினர் என்பதும், திருடிய நகையை அதே ஆர்ப்பாக்கம் கிராமத்தில் உள்ள கடையில் அடகு வைத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த அடகு கடைக்கு சென்ற போலீசார் 6 கிராம் தங்க சங்கிலியை மீட்டனர். மேலும் கோபாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.






