

சென்னை,
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஆண்டுதோறும் கால அட்டவணை வெளியிட்டு அதற்கு ஏற்றார் போல் தேர்வு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு நடத்தி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு தற்போது மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிற பதவிகள், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான மூன்றாம் கட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு அடுத்த மாதம்(மே) 8-ந் தேதி அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான (www.tnpsc.gov.in)-லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.