திருச்செந்தூர் முருகன் கோவில் கடைகள் ஏல முறைகேடு: அறநிலையத்துறை பெண் இணை ஆணையர் பணி இடைநீக்கம்

திருச்செந்தூர் முருகன் கோவில் கடைகள் ஏலம் விடுவதில் முறைகேடு நடைபெற்ற புகாரில் இணை ஆணையர் பாரதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் வெவ்வேறு சம்பவங்களில் 2 அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவில் கடைகள் ஏல முறைகேடு: அறநிலையத்துறை பெண் இணை ஆணையர் பணி இடைநீக்கம்
Published on

சென்னை,

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான கடைகள், பல நூறு ஏக்கர் நிலங்கள் உள்ளன. கோவிலுக்கு சொந்தமான கடைகளை வெளிப்படையாக பொது ஏலம் விடாமல் மேல் வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறைக்கு புகார் வந்தது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் விதிகளை மீறி கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருப்பதும், அதனால் அறநிலையத்துறைக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த நேரத்தில் இணை ஆணையராக (தற்போது திருவேற்காடு கோவில் இணை ஆணையர்) இருந்த பாரதியை பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதேபோன்று, இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் சென்னை முகப்பேர் சந்தான சீனிவாச பெருமாள் கோவிலில் 40 பணியாளர்கள் ஆணையரின் ஒப்புதல் இல்லாமல் நியமிக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் 2 செயல் அலுவலர்கள் மீது 17பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உதவி ஆணையர் அன்னக்கொடி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு கோவிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்றதாக துணை ஆணையர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இருந்தது. கடந்த 5 ஆண்டுகளாக நடந்த விசாரணை அறிக்கையை மண்டல இணை ஆணையர் சமீபத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், துணை ஆணையர் ரமேஷ் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில் அவரை பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒரே நாளில் இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் ஆகிய 3 பேர் மீது துறைரீதியாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com