

திருச்செந்தூர்,
முருகப்பெருமானின் 2-வது படைவீடு என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில், கந்தசஷ்டி விழாவின் முக்கிய விழாவாகிய சூரசம்ஹாரம் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் வழக்கமாக அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் வந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள் சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. திருச்செந்தூர் கடற்கரை முகப்பில் 300க்கு 300 சதுர அடியில் மிகக் குறைவான பக்தர்களோடு இந்த வருடம் சூரசம்ஹாரம் நிகழ்ந்தது. திருச்செந்தூர் ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங் மேற்பார்வையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 2,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
உற்சவர் ஜெயந்திநாதர் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய நிலையில், சூரனை வதம் செய்யும் வேல், பூஜைகள் செய்யப்பட்டு சஷ்டி மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டது. அதனை தொடர்ந்து யானை முகம் கொண்ட தாரகாசூரன், சிங்கமுகாசூரன் ஆகியோரை வதம் செய்த பிறகு இறுதியாக சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
சூரசம்ஹாரம் நிறைவு பெற்ற பிறகு வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து பக்தர்கள் கடலில் நீராடி, சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.