கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா தொடங்கியது - திரளான பக்தர்கள் பங்கேற்பு

கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா தொடங்கியது - திரளான பக்தர்கள் பங்கேற்பு
Published on

அழகர்கோவில்

கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளழகர் கோவில்

மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில், 108 வைணவதலங்களில் ஒன்றானது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவும் தனி பெருமையுடையது.

இந்த திருவிழாவானது நேற்று காலை தொடங்கியது. அன்று மாலை 6 மணிக்கு மேளதாளம் முழங்க தீவட்டி வர்ணக்குடை பரிவாரங்களுடன் கள்ளழகர் என்ற சுந்தர்ராசப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன், மனோரஞ்சித மாலைகள் அலங்காரத்தில், சுந்தரவல்லி யானை முன்செல்ல, பல்லக்கில் புறப்பாடாகி சென்று, அங்குள்ள நந்தவன ஆடி வீதிகள் வழியாக சென்று திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.பின்னர் பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் தீபாராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதன் பின்னர் இரவே சுவாமி கோவிலுக்குள் போய் இருப்பிடம் சென்றார். இதை தொடர்ந்து இன்றும், 4-ந்தேதி நாளையும் அதே நிகழ்ச்சிகள் அதே மண்டபத்தில் நடைபெறுகிறது.

திருக்கல்யாணம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண திருவிழா வருகிற 5-ந்தேதி அன்று காலை 9.50 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் சுந்தர்ராசப்பெருமாள், ஒரே நேரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாணசுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிமார்களையும் மணக்கிறார்.

திருக்கல்யாணம் முடிந்ததும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து கோவில் வளாகத்திற்குள் பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்படும். அப்போது திருக்கல்யாண மொய் எழுதப்படும். பின்னர் அன்று இரவு பெருமாள் நான்கு தேவியர்களுடன் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பின்னர் 6-ந் தேதி மஞ்சள் நீர்சாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com