திருக்குறள் வாரம்: மெரினா கடற்கரையில் ஜேம்ஸ் வசந்தன் இசை நிகழ்ச்சியுடன் களைகட்டிய கொண்டாட்டம்


திருக்குறள் வாரம்: மெரினா கடற்கரையில் ஜேம்ஸ் வசந்தன் இசை நிகழ்ச்சியுடன் களைகட்டிய கொண்டாட்டம்
x

தமிழ் இலக்கிய பாடல்கள் இசை வடிவில் மக்கள் ரசிக்கும் வகையில் கொண்டாட்ட இசையாக நடத்தப்பட்டது.

சென்னை,

திருக்குறள் வாரத்தினை முன்னிட்டு, திருக்குறள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களை மையமாகக் கொண்ட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் இசை நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் இன்று(18.01.2026) நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ‘திருக்குறள் வாரம்’ கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் கடந்த ஆண்டு 31.12.2024 அன்று குமரிமுனை வள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்வின்போது அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் திருக்குறள் குறளாசிரியர் மாநாடு, அரசு அலுவலர்களுக்கான போட்டிகள், பொதுமக்களுக்கான திருக்குறள் போட்டிகள், கல்லூரி மாணவ, மாணவியருக்கான கலை மற்றும் இலக்கியப் போட்டிகள், திருக்குறள் நாட்டிய நாடகம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, சென்னை மெரினா கடற்கரையில் திருக்குறள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களை மையமாகக் கொண்ட இசை நிகழ்ச்சி இன்று(18.01.2026) நடத்தப்பட்டது. இதில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனால் இசையமைக்கப்பட்ட திருக்குறளும், தமிழ் இலக்கிய பாடல்களும் இசை வடிவில் மக்கள் ரசிக்கும் வகையில் கொண்டாட்ட இசையாக நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் (சுகாதாரம்) முனைவர் வீ.ப.ஜெயசீலன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ந.அருள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story