

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவித் திட்டத்தின் கீழ், சுற்றுலாத் துறையின் மூலம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 12 நினைவுச் சின்னங்கள் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள தெரிவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டம், கட்டபொம்மன் கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம், மனோரா நினைவு சின்னம், நாகப்பட்டினம் மாவட்டம், டச்சுக் கல்லறை ஆகிய 3 நினைவுச்சின்னங்கள் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் கடந்த 5-10-2020 அன்று திறந்து வைக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, மதுரை மாவட்டம், திருமலை நாயக்கர் அரண்மனையில் ரூ.3 கோடியே 60 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பீட்டிலும், சிவகங்கை மாவட்டம், மருதுபாண்டியர் கோட்டையில் ரூ.60 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் மலைக்கோட்டையில் ரூ.2 கோடியே 41 லட்சம் செலவிலும், கன்னியாகுமரி மாவட்டம், உதயகிரி கோட்டையில் ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டிலும், திருவண்ணாமலை மாவட்டம் சின்னையன்குளத்தில் ரூ.15 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டிலும், திருவண்ணாமலை மாவட்டம், பூண்டி அருகர் கோவிலில் ரூ.33 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பீட்டிலும், திருவண்ணாமலை மாவட்டம், தடாகபுரீஸ்வரர் கோவிலில் ரூ.1 கோடியே 85 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பீட்டிலும், திருவண்ணாமலை மாவட்டம், கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவிலில் ரூ.1 கோடியே 99 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.13 கோடியே 27 லட்சத்து 27 ஆயிரம் செலவில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட 8 பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
மேலும், தொல்லியல் துறையில் தொல்லியல் அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 17 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், க.பாண்டியராஜன், தலைமைச்செயலாளர் க.சண்முகம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் விக்ரம் கபூர், தொல்லியல் துறை ஆணையர் த.உதயச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், அரசு வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் மாநில தலைமை கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாநில அளவிலான தலைமை கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தால் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக பணியாளர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். அந்த வகையில், மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலமாக தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாகவுள்ள 175 உதவியாளர் பணியிடங்கள், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் காலியாகவுள்ள 57 உதவியாளர் பணியிடங்கள், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தில் காலியாகவுள்ள 53 உதவியாளர் பணியிடங்கள், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தில் காலியாகவுள்ள 6 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தில் காலியாகவுள்ள 2 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், என மொத்தம் 293 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 9 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் செல்லூர் ராஜூ, தலைமைச்செயலாளர் க.சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவுச்சங்கங்களின் பதிவாளர் இல.சுப்பிரமணியன், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர். இளங்கோவன், துணைத்தலைவர் எஸ்.ஆசைமணி, மேலாண்மை இயக்குனர் ஆர்.ஜி. சக்திசரவணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.