7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னருக்கு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னருக்கு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை
Published on

சென்னை,

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னரின் பதிலை, சுப்ரீம்கோர்ட்டில் மனுவாக மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், முடிவு எடுக்க ஜனாதிபதியே முழு அதிகாரம் படைத்தவர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் மீது எந்த முடிவையும் எடுக்காமல் 28 மாதங்களாகக் கிடப்பில் வைத்திருந்த ஆளுநர், உச்ச நீதிமன்றம் கடிந்து கொண்டு காலக்கெடு விதித்த பிறகு தான் இப்போது முடிவெடுத்திருக்கிறார்.

கடந்த ஜனவரி 25-ம் தேதி எடுக்கப்பட்ட கவர்னரின் முடிவு இன்றுதான் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் மூலமாகவே தெரியவந்திருக்கிறது. ஆளுநர் மட்டுமே தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்தார் என்பதைவிட பா.ஜ.க. தலைமையிலான மோடி அரசின் முடிவைத்தான் ஆளுநர் தெரிவித்துள்ளார் என்பது உறுதியாகிறது.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை அவமதிப்பதாக மட்டுமின்றி, அரசியலமைப்புச் சட்ட உறுப்பு எண் 161, அவருக்கு அளித்துள்ள அதிகாரத்தை மறுத்ததன்மூலம் அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதித்துள்ளார் என்றே கருத வேண்டி உள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிப்பதில் உண்மையிலேயே தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால், உடனடியாக மீண்டும் சட்டப்பேரவையில் அல்லது அமைச்சரவையில் அதற்கான தீர்மானத்தை இயற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அதில் ஆளுநர் முடிவெடுக்கும் வரை, அந்த ஏழு பேரையும் காலவரம்பற்ற பரோலில் விடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com