பள்ளிக்கல்வித்துறைக்கு இயக்குநர் பதவியை மீண்டும் கொண்டு வர வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

பள்ளிக்கல்வித்துறைக்கு இயக்குநர் பதவியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறைக்கு இயக்குநர் பதவியை மீண்டும் கொண்டு வர வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி இயக்குநர் என்ற பதவி ரத்து செய்யப்படுவதாகவும், இனி அந்தப் பணிக்கான பொறுப்புகளை பள்ளிக்கல்வி ஆணையரே கையாள்வார் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த முடிவிற்கு பா.ம.க. உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது;-

கடந்த 200 ஆண்டுகளாக பள்ளிக் கல்வித்துறையில் இருந்த இயக்குநர் பதவியை ஒழித்துவிட்டு, அதற்கு பதிலாக ஆணையராக, ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்திருக்கிறது. பள்ளிக் கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் கருத்து மாறுபாடு இல்லை.

ஆனால், இயக்குநர் பதவி பல விதங்களில் தமிழகக் கல்விச் சூழலுக்கு அவசியமானதாகும். எனவே, அதை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று, தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பொறுப்புக்கு ஆசிரியர்கள் பதவி உயர்வின் மூலம் வந்துகொண்டிருந்தனர். மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் பின்னர் முதன்மைக் கல்வி அலுவலராகவும், அதன் பின்னர் கல்வித்துறை இணை இயக்குநராகவும், பின்னர் இயக்குநராகவும் பதவி உயர்வு பெற்று அத்துறையை நிர்வகித்து வந்தனர்.

இப்போது அந்தப் பதவி ஒழிக்கப்பட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆணையராக நியமிக்கப்படுவதால், இதுவரை பள்ளிக் கல்வியை நன்கு அறிந்த ஒருவர் இயக்குநராக வருவதற்கு இருந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர் பணிகளுக்கான தேர்வில் இட ஒதுக்கீடு இருக்கிற காரணத்தினால் இயக்குநர் பொறுப்புக்குப் பதவி உயர்வின் மூலம் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வர வாய்ப்பு இருந்தது. அது சமூக நீதிக்கு உகந்ததாகவும் இருந்தது.

பள்ளிக் கல்வித்துறைச் செயலாளராக ஏற்கெனவே ஒரு ஐஏஎஸ் அதிகாரி இருக்கும்போது, மேலும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியை அவருக்குக் கீழே நியமிப்பது தேவையா? என்பதையும் தமிழக அரசு சிந்தித்து, இயக்குநர் பதவியை முன்பு இருந்தது போலவே உருவாக்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com