இயக்குனர் வெற்றிமாறன் பெரியாரின் பேரன் - திருமாவளவன்

ராஜராஜ சோழன் மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா? என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் பெரியாரின் பேரன் - திருமாவளவன்
Published on

சென்னை,

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60-வது பிறந்த நாளையொட்டி குறும்பட, ஆவணப்பட கலைத்திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுத்ததால் தான் தமிழ்நாடு ஒரு மதச்சார்பற்ற நாடாக மாறியுள்ளது. அதனால்தான் வெளிப்புற ஆதிக்கத்தை எதிர்க்கும் பக்குவத்தையும் சினிமா பெற்றுள்ளது என நினைக்கிறேன்.

சினிமா என்பது வெகுமக்களை மிக எளிமையாக சென்றடையும் கலைவடிவம். சினிமாவை அரசியல் மையப்படுத்த வேண்டியது முக்கியம். சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுக்கும்போது, கலை கலைக்கானது தான் எனப் பேசினார்கள். மக்களை பிரதிபலிப்பது தான் கலை என உணர்த்தினார்கள். அந்த கலையை நாம் சரியாக கையாள வேண்டும்.

ஏற்கெனவே நம்மிடமிருந்து அடையாளங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதாகட்டும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும் இப்படி தொடர்ந்து நடக்கிறது என்று பேசினார்.

இதற்கு ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் சிவாலயத்தை கட்டிய ராஜராஜ சோழனை இந்து இல்லை என்பதா? என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தெடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள வானதி சீனிவாசன், இயக்குனர் வெற்றிமாறன் வன்மத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றார்.

உலகமே வியக்கும் அளவுக்கு தஞ்சை மண்ணில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய ஆலயம் அமைத்தவர் ராஜராஜ சோழன். ஆனால், அந்நிய மதங்களை இந்த மண்ணில் நிலைநிறுத்துவதற்காக, இந்து மத கலாசாரம் மற்றும் அடையாளங்களை அழிக்க பல நூறு ஆண்டுகளாக சதி வேலைகள் நடந்து வருகின்றன. அது இன்னமும் நிற்காமல் தொடர்கிறது என்பதன் சாட்சி தான் வெற்றிமாறனின் பேச்சு என குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த நிலையில் 1000 வருடங்களுக்கு முன்னர் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர்மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா? இதைத்தானே குறிப்பிட்டார் இயக்குனர் வெற்றிமாறன். அவர் பெரியாரின் பேரன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து?

இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை என்று உரத்துச் சொல்கின்றனர். போராடவும் செயகின்றனர். இந்நிலையில் 1000 வருடங்களுக்கு முன்னர் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர்மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா? இதைத்தானே குறிப்பிட்டார் இயக்குனர் வெற்றிமாறன். அவர் பெரியாரின் பேரன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com