ராமதாஸ் பெறாத பிள்ளை திருமாவளவன்: அருள் எம்.எல்.ஏ. பேட்டி

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று அருள் எம்.எல்.ஏ. கூறினார்.
விழுப்புரம்,
சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. அந்தவகையில், அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. (அன்புமணி), த.மா.கா., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து தனது கட்சி நிர்வாகிகளுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். தைலாபுரத்தில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் என்.டி.ஏ. கூட்டணியில் அன்புமணி இணைந்த நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆலோசனைக்கு பின்னர் தைலாபுரம் தோட்டத்தில் பாமக எம்.எல்.ஏ. அருள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
“ராமதாஸ் மீது எந்த வழக்குகளும் இல்லை. அவர் யாருடைய மிரட்டலுக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. தைலாபுரம் இல்லத்தில்தான் கூட்டணிக்கான கையெழுத்து போடப்படும். அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு உதாரணம் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. விசிகவுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ராமதாஸ் பெறாத பிள்ளை திருமாவளவன். வன்னியர்களையும், தலித் மக்களையும் இரண்டு தண்டவாளங்களாகப் பார்ப்பவர்தான் ராமதாஸ். அப்பட் இருக்க எங்களுக்கு யாருமே எதிரி அல்ல.” என்று கூறினார்.






