நாள்தோறும் வேடிக்கை அரசியலை பா.ஜ.க. நடத்தி வருகிறது

அ.தி.மு.க. சரியாக செயல்படாததால் நாள்தோறும் வேடிக்கை அரசியலை பா.ஜ.க. நடத்தி வருவதாக தொல்.திருமாவளவன் கூறினார்.
நாள்தோறும் வேடிக்கை அரசியலை பா.ஜ.க. நடத்தி வருகிறது
Published on

காரைக்குடி, 

அ.தி.மு.க. சரியாக செயல்படாததால் நாள்தோறும் வேடிக்கை அரசியலை பா.ஜ.க. நடத்தி வருவதாக தொல்.திருமாவளவன் கூறினார்.

பொதுக்கூட்டம்

காரைக்குடி பாண்டியன் தியேட்டர் திடலில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் மாமன்னர்கள் மருது சகோதரர்கள் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் நவ்ஷாத் அலிகான் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் சண்முகராஜா, நிர்வாக குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சகுபர் சாதிக் வரவேற்றார். தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரீப் தொடக்க உரையாற்றினார்.

கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஜனநாயகத்திற்கு எதிரானது. மனுஸ்மிர்திதான் ஆர்.எஸ்.எஸ். கொள்கை. பா.ஜனதா கட்சி அதன் அரசியல் பிரிவு. பா.ஜ.க. பல ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாமல் இருந்ததற்கு காரணம் திராவிட இயக்கங்கள்தான்.

தோல்வி உறுதி

தற்போது அ.தி.மு.க. பலமிழந்து உள்ளதாலும், சரியான தலைமை இல்லாததாலும், அ.தி.மு.க. சரியாக செயல்படாததாலும் தி.மு.க.விற்கு அடுத்த சக்தியாக நாங்கள்தான் என்று காட்டிக்கொள்ள பா.ஜ.க. ஒவ்வொரு நாளும் வேடிக்கையான அரசியலை நடத்தி கொண்டுள்ளது. இதற்கு காரணமும் ஆர்.எஸ்.எஸ்.தான். அகில இந்திய அளவில் காங்கிரசுக்கு அதிகம் வாக்களிப்பது தலித்துகளும், கிறிஸ்தவ, முஸ்லிம் மக்களும்தான். தலித் மக்கள் காங்கிரசுக்கு ஓட்டு போடுவதனால், தலித் மக்களை குறிவைக்கின்றனர்.

அரசியல் ஆதாயம் தேடத்துடிக்கும் தலைவர்களை தன் பக்கம் ஈர்ப்பது ஆர்.எஸ்.எஸ். நோக்கமாகவும், முழு நேர வேலையாகவும் உள்ளது. நான் புதிதாக எதுவும் செய்யவில்லை. அம்பேத்கர் மற்றும் பெரியார் செய்ததை பின்பற்றி வருகிறேன். இந்தியா முழுவதும் பா.ஜ.க.வினரோடு கூட்டணி வைத்திருந்தவர்கள் அவர்களைவிட்டு விலகிவிட்டனர். சிலர் வெளியேற முடிவெடுத்துவிட்டனர். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசியகுழு உறுப்பினர் மகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சின்னத்துரை எம்.எல்.ஏ., மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக ஒருங்கிணைப்பாளர் பசும்பொன் பாண்டியன் ஆகியோர் பேசினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார், மாநில செயலாளர்கள் இளைய கவுதமன், பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com