திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் அறுபெரும் விழா - வெங்கடேசன் எம்.பி. பங்கேற்பு

திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் அறுபெரும் விழாவில் வெங்கடேசன் எம்.பி. பங்கேற்றார்
திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் அறுபெரும் விழா - வெங்கடேசன் எம்.பி. பங்கேற்பு
Published on

திருப்பரங்குன்றம்

மதுரை திருநகர் முதல் பஸ் நிறுத்தத்தில் உள்ள முத்துத்தேவர், முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் நிறுவனர் முத்துத்தேவரின் 128-வது ஜெயந்தி விழா, பள்ளியின் 66-வது ஆண்டுவிழா, பெற்றோர்-ஆசிரியர் கழக ஆண்டு விழா, புதிய கட்டிட திறப்பு விழா, பள்ளி நிறுவனர் முத்துத்தேவரின் அஞ்சல்தலை வெளியிட்டு விழா, வெங்கடேசன் எம்.பி.க்கு விருது வழங்கும் விழா ஆகிய அறுபெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி பள்ளியில் உள்ள முத்துத்தேவரின் சிலைக்கு பள்ளியின் தலைவர் கோச்சடை கே.சரவணன், செயலர் கோச்சடை ஆர்.கண்ணன், இயக்குனர் பி.நடனகுருநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து நடந்த விழாவிற்கு தலைமையாசிரியர் பி.ஆனந்த் தலைமை தாங்கினார். முதுகலை தமிழ் ஆசிரியை அன்புகார்த்திகாயினி வரவேற்றார். விழாவின் தொடக்கமாக 2022-2023-ம் ஆண்டின் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து காணொலி காட்சி ஒளிபரப்பப்பட்டது. மாணவிகளின் பேச்சு, நடனம், கரகாட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக சு.வெங்கடேசன் எம்.பி. கலந்துகொண்டு பள்ளியின் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் அவர் பள்ளி நிறுவனர் முத்துத்தேவரின் அஞ்சல் தலையை வெளியிட்டார். கடந்த 2022-2023-ம் கல்வி ஆண்டில் அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து பள்ளிக்கு பெருமை சேர்த்த ஆசிரியர்களுக்கும், அறுபெரும் விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், பள்ளி தலைவர், செயலர், இயக்குனர், வெங்கடேசன் எம்.பி.யின் மனைவி கமலா வெங்கடேசன் ஆகியோர் பரிசு வழங்கினர். இதே போல கடந்த 2021- 2022 கல்வி ஆண்டில் 10, 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதன்மை பெற்றவர்களுக்கு பள்ளி இயக்குனர் பரிசு வழங்கினார். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வெங்கடேசன் எம்.பி.க்கு அவரது சேவையை பாராட்டி, "மாமனிதர் தமிழ்வைகை" என்னும்பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் வெங்கடேசன் எம்.பி.யின் பெற்றோரும் கவுரவிக்கப்பட்டனர். முதுகலை தமிழ் ஆசிரியை அன்பு கார்த்திகாயினி, பட்டதாரி தமிழ் ஆசிரியர்கள் சரவணன், ராஜகோபால் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com