திருப்பரங்குன்றம் விவகாரம்: மேல் முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு


திருப்பரங்குன்றம் விவகாரம்: மேல் முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு
x

நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு இந்த வழக்கினை விசாரித்தது. வழக்கில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

மதுரை,

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்ற அமர்வில் அறநிலையத் துறை மற்றும் தர்கா நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மேல்முறையீடு செய்தனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து இந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன.அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் வைத்த வாதத்தில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்களை ராம. ரவிக்குமார் தாக்கல் செய்யவில்லை என்றார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் இல்லை என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

கடந்த 1920ஆம் ஆண்டில் மலையை ஆய்வு செய்த நீதிபதி, அங்கு தூண் இருந்திருந்தால் அதுபற்றி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பார். ஆனால் அவர் எதுவும் குறிப்பிடவில்லை. கோயிலின் வழக்கமான நிகழ்வுகளை விதிமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு கோயில் நிர்வாகத்துக்கு முழு உரிமை உள்ளது. இந்த வழக்கை உரிமையியல் நீதிமன்றத்தில்தான் நடத்தி இருக்க வேண்டும். திருப்பரங்குன்றத்தில் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றித்தான் தீபம் ஏற்றப்படுகிறது.

பூஜை விதிகள், அர்ச்சனை முறைகள், வழிபாட்டு உரிமைகள் என அனைத்தும் முறையாகப் பின்பற்றப்படுகின்றன. எனவே, தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்டதை ஏற்க முடியாது. இந்த விவகாரம் தீபம் ஏற்றுவதற்கானதாக இருந்தாலும் அல்லது சொத்துரிமைக்கானதாக இருந்தாலும் கோயில் நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்வியின்படி, இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்புடையதா என்ற கேள்வி எழுகிறது. தனிநபர் கோயிலின் இடத்தில் ‘இங்கேதான் தீபம் ஏற்ற வேண்டும்’ என சொந்தம் கொண்டாட முடியுமா? இது சரியாக இருக்குமானால், அரசு சொத்தில் தனிநபர் உரிமை கோர இயலுமா? என்று வாதிட்டார்.இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் வழக்கில் நாளை தீர்ப்பளிக்கப்பட உள்ளது.

1 More update

Next Story