

சென்னை,
திருப்பரங்குன்றம் - பாரம்பரிய மரபையும், மக்கள் ஒற்றுமையையும் ,மதநல்லிணக்கத்தையும் பாதுகாத்த த.வெ.க அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-
மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றத்தில் நீண்டகால பாரம்பரிய மரபுப்படி, உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் அமைந்துள்ள தீபத்தூண் மண்டபத்தில் கார்த்திகை தீபம் வழக்கம் போல் இன்று ஏற்றப்பட்டுள்ளது.
அதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளையும்,உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொடுத்து உதவியுள்ளது. இதன் மூலம் உண்மையான பக்தர்களின் விரும்பங்களை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது.
பல்வேறு அழுத்தங்களுக்கும், மதவாத வகுப்புவாத சக்திகளின் மிரட்டல்களுக்கும் அடிபணியாமல் தவெக அரசு உறுதியோடு செயல்பட்டு வழக்கமான முறையில் கார்த்திகை தீபத்தை ஏற்றியது பாராட்டுக்குரியது. சட்டம் ஒழுங்கையும்,மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் பாதுகாப்பதில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு அரசுக்கும், முதல்-அமைச்சருக்கும், மதுரை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கும், காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறது.
ஆன்மீக உணர்வுகளை பயன்படுத்தி, அரசியல் நோக்கங்களுக்காக மக்களை மத ரீதியில் பிளவு படுத்த முயன்ற மதவெறி சக்திகளின் சூழ்ச்சிகளை ஒன்றுபட்டு முறியடித்த தமிழக மக்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மனம் நிறைந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறது.
கார்த்திகை விழாவின் போது ,தொடர்ந்து மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பதற்றத்தை ஏற்படுத்திவரும் ,அரசியல் சட்டத்திற்கும் ,மதச்சார்பின்மைக்கும் எதிராக செயல்பட்டுவரும் சென்னை ஐகோர்ட்டின் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது தலைமை நீதியரசர் உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.