திருப்பரங்குன்றம் மலை மற்றும் முருகன் கோவிலை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கக்கூடாது - மு.வீரபாண்டியன்

மலையில் உள்ள குடைவரை கோவில் மற்றும் கல்வெட்டுகள் அடங்கிய சுமார் 50 சென்ட் பரப்பளவு மட்டுமே பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன்
மு. வீரபாண்டியன்
Published on: 

சென்னை,

திருப்பரங்குன்றம் மலை மற்றும் முருகன் கோவிலை இந்தியத் தொல்லியல் துறையிடம் (ASI) ஒப்படைக்க கூடாது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பொதுநல மனு

ஐகோர்ட்டு மதுரை கிளையில், இந்துத்துவ கருத்தியலும், மதச்சார்பு உணர்வும் கொண்ட ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருப்பரங்குன்றம் மலை மற்றும் முருகன் கோவிலை இந்தியத் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

தவறான செயல்

அது, கடந்த சில வருடங்களாகத் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நடைமுறையை பிரச்சினையாக்கி, பதற்றம் ஏற்படுத்தி, மோதல் நிலைக்கு எடுத்து செல்லும் உள்நோக்கம் கொண்ட தவறான செயலின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது.

மதச்சார்பின்மை கொள்கை

திருப்பரங்குன்றம் பிரச்சினையில் சங்பரிவார் அமைப்புகளின் அழுத்தங்களுக்கு ஆளாகாமல், தமிழ்நாடு அரசு முந்தைய ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து செயல்பட்டு வருகிறது. மதச்சார்பின்மை கொள்கையில் எந்தவித சமரசத்துக்கும் இடம் தராமல் திருப்பரங்குன்றம் பிரச்சினையை தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் அரசியல் உறுதியுடன் சரியான நிலைப்பாட்டை எடுத்து அணுகி வருகின்றன. இந்நிலையில், நீதிமன்றத்தின் வழியாக பிரச்சினையை திசை திருப்பி, "நீதிமன்றம் வழங்கிய நியாயம்" என்ற பரப்புரை செய்து அரசியல் ஆதாயம் தேடும் மதவெறி சக்திகளின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே முறியடிக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலை

நூறாண்டுகளுக்கு முன்பு 1923-ஆம் ஆண்டில் சிவில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பும், காலனி ஆட்சி காலத்தில் சுப்ரீம் கோர்ட்டிற்கு நிகரான பிரிவி கவுன்சில் (Privy Council) 1931-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பின்படியும், திருப்பரங்குன்றம் மலையின் முழு உரிமையும் முருகன் கோவிலுக்கே சொந்தமானதாகும்.

50 சென்ட் பரப்பளவு

அரசாணைகளின்படி, மலையில் உள்ள குடைவரை கோவில் மற்றும் கல்வெட்டுகள் அடங்கிய சுமார் 50 சென்ட் பரப்பளவு மட்டுமே பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒட்டுமொத்த மலையையோ அல்லது வழிபாட்டில் உள்ள கோவிலையோ தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பது அவசியமற்றது.

சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்

திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கக் கோரும் வழக்கு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வரும் செவ்வாய்க்கிழமை (17.11.2026) அன்று விசாரணைக்கு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில், தமிழ்நாடு அரசின் கொள்கை நிலையில் உறுதியாக நின்று, வலுவான வாதங்களை முன்வைத்து, திருப்பரங்குன்றம் மலை மற்றும் முருகன் கோவிலை தமிழ்நாடு அரசின் பொறுப்பிலிருந்து விலக்கி கொண்டு செல்ல நடைபெறும் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்.

உரிமை

தமிழ்நாட்டின் உரிமையையும், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் முருகன் கோவிலின் வழிவழியான உரிமையையும் பாதுகாக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X