

சென்னை,
களத்தில் புதிய நடைமுறை ஒன்று தொடங்கப்படுவதை அனுமதிப்பது, நாளைய உரிமை கோரல்களுக்கு முன்னுதாரணமாகிவிடும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலப் பொறுப்புத் தலைவர் உமர் பாரூக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய நடைமுறைகளுக்கு மாறாக, தர்கா அருகே உள்ள நில அளவைக் கல்லில் இந்த முறை மட்டும் கார்த்திகைத் தீபம் ஏற்றிக்கொள்ளலாம் என சுப்ரீம்கோர்ட்டு வழங்கியுள்ள இடைக்கால அனுமதி மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது. இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டின் முந்தைய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள சுப்ரீம்கோர்ட்டு, அதே வேளையில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற அனுமதி அளித்திருப்பது சட்டரீதியான முரண்பாடுகளைக் கொண்டுள்ளது.
சட்டத்தின் ஆட்சி நடைபெறும் ஒரு ஜனநாயக நாட்டில், ஏற்கெனவே நிலைநிறுத்தப்பட்ட சட்டப்பூர்வமான நடைமுறைகளைத் தாண்டி, "ஒருமுறை மட்டும்" என்ற அடிப்படையில் வழங்கப்படும் இத்தகைய தற்காலிக அனுமதிகள், எதிர்காலத்தில் அதையே நிரந்தர வழக்கமாக மாற்றுவதற்கான தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் அபாயம் உள்ளது. நீதிமன்றத்தின் நடவடிக்கை என்பது எவ்வித சமரசமுமின்றி முழுமையான சட்ட அடிப்படையில் நீதியாக மட்டுமே அமைய வேண்டுமே தவிர, இத்தகைய உத்தரவுகள் நீதி பரிபாலன முறையையே கேள்விக்குள்ளாக்குவதாக அமைந்துவிடக் கூடாது.
திருப்பரங்குன்றம் என்பது இரு சமூக மக்களும் காலம் காலமாகப் பரஸ்பர மரியாதையுடனும் அமைதியுடனும் வழிபாடு நடத்தி வரும் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான பகுதியாகும். பல தசாப்தங்களாக வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டு வரும் நிலையில், கோயில் தரப்பும் ஆகம விதிப்படி வழக்கமான இடத்தில் தான் தீபம் ஏற்றப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் கூறிய நிலையில், இல்லாத ஒரு புதிய வழக்கத்தைத் திணிக்க முயற்சித்து வரும் சில அமைப்புகளின் பிரச்சாரத்திற்கு துணை போகும் வகையில் சுப்ரீம்கோர்ட்டின் இந்த ஒருநாள் அனுமதி உத்தரவு அமைந்துள்ளது.
"இந்த உத்தரவால் எந்தத் தரப்பினருக்கும் சொத்தின் மீதான உரிமை வழங்கப்பட்டதாகக் கருத முடியாது" என நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தாலும், களத்தில் புதிய நடைமுறை ஒன்று தொடங்கப்படுவதை அனுமதிப்பது, நாளைய உரிமை கோரல்களுக்கு முன்னுதாரணமாகிவிடும். மேலும், இந்த அனுமதி அப்பகுதியில் நிலவும் சமூக நல்லிணக்கத்தையும் பொது அமைதியையும் சீர்குலைக்க நினைப்பவர்களுக்குச் சாதகமாக அமைந்துவிடும் என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை.
எனவே, தமிழ்நாடு அரசு இவ்விவகாரத்தில் உள்ள சட்டரீதியான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி, உடனடியாக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், காலம் காலமாகத் தொடரும் பாரம்பரிய நடைமுறைகளைப் பாதுகாக்கவும், மதநல்லிணக்கத்தையும் சமூக அமைதியையும் நிலைநாட்டவும் வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.