

மதுரை,
திருப்பரங்குன்றம் மலையை அளவிட்டு, ஆவணங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிடுகையில் 5 ஏக்கர் அளவுக்கு வித்தியாசம் உள்ளதாகவும், வித்தியாசம் காணப்பட்ட பகுதியில் மறுஅளவீடு செய்யப்பட இருப்பதாகவும் மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந் ததாவது:-
திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்றும், தொல்லியல் துறையினரிடம் அனுமதி பெற்ற பிறகே திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தங்களது கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
அதன்பேரில் அதிகாரிகளிடம் புதிதாக மனு அளித்தேன். ஆனால் எனது மனுவை பரிசீலித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது திருப்பரங்குன்றம் மலை முழுவதும் அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் இது தொடர்பான நடவடிக்கைக்கு அவகாசம் வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில நில அளவை துறை சார்பில் ஆஜரான வக்கீல், திருப்பரங்குன்றம் மலை முழுவதும் சமீபத்தில் அளவீடு செய்யப்பட்டது. இதில் தற்போதைய மலையின் இருப்பும், ஏற்கனவே ஆவணங்களில் உள்ள அளவீடுகளின் தகவல்களிலும் முரண்பாடுகள் உள்ளன. அதாவது 5 ஏக்கர் பரப்பளவு வித்தியாசப்படுகிறது.
எனவே திருப்பரங்குன்றம் மலையில் நில அளவு வேறுபாடு இருக்கும் பகுதியில் மட்டும் மீண்டும் அளவீடு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. முழுமையாக இந்த பணிகள் நிறைவடைந்த பின்பு அது தொடர்பான விரிவான அறிக்கைகள் தாக்கல் செய்கிறோம். அதற்கு அவகாசம் வேண்டும் என்றார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் 1921-ம் ஆண்டில் பிரிவியூ கவுன்சில் விரிவான தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
அப்போது இருந்த மலை மற்றும் சுற்றுப்பகுதிகள் விவரம் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த சமயம் திருப்பரங்குன்றம் மலையின் பரப்பளவுக்கும், தற்போதுக்கும் மாறுபாடுகள் என்ன? அந்த பகுதியில் கட்டிடங்கள் உள்ளதா? என்பது குறித்து நில அளவை துறையின் அறிக்கையுடன் சேர்த்து உரிய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.