திருப்பரங்குன்றம் மலையை அடுத்த மாதத்துக்குள் அளவீடு செய்ய வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

திருப்பரங்குன்றம் மலையை மத்திய தொல்லியல் துறையினருடன் இணைந்து அடுத்த மாதத்துக்குள் அளவீடு செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மதுரை,

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்படி மத்திய தொல்லியல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, இந்த கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி அதிகாரிகளிடம், திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்து தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்படி புதிதாக மனு அளித்தேன். அந்த மனுவை பரிசீலித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே கோர்ட்டு உத்தரவை முறையாக பின்பற்றாத அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தன் ஆஜராகி, திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்தால் மட்டுமே தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவது பற்றி பரிசீலிக்க இயலும். மத்திய தொல்லியல்துறை அளவீடு செய்ய தயாராக உள்ளது. வருவாய் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த வழக்கில் மதுரை மாவட்ட கலெக்டரையும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கிறோம். அவர் மத்திய தொல்லியல் துறையுடன் சேர்ந்து திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ய வேண்டும். இதற்கு வருவாய்த்துறையினர் போதிய ஒத்துழைப்பை வழங்கும்படியும் கலெக்டர் உத்தரவிட வேண்டும். இந்த நடவடிக்கையை அடுத்த மாதம் (மே மாதம்) முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்தி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com