திருப்பரங்குன்றம் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் பற்றி விவாதிக்க விரும்பவில்லை: அமைச்சர் விஸ்வநாதன்

அரசு பதவி ஏற்று 6 மாதங்கள் நிறைவடைகின்றன. இந்த ஆறு மாதங்களும் தமிழ்நாட்டில் நல்ல நிர்வாகத்தை வழங்கியிருக்கிறோம் என்று விஸ்வநாதன் கூறினார்.
அமைச்சர் விஸ்வநாதன்
Published on: 

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அந்த தீர்ப்பு விவாதிக்கப்படுகின்ற நிலையில் இல்லை. ஏனென்றால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விவாதத்திற்கு உட்பட்டது அல்ல. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில், அந்த விவகாரத்தைக் கடந்து செல்லவே விரும்புகிறோம். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரின் கருத்து ஏற்கெனவே வெளியாகியிருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஆய்வு செய்வதற்கோ, விவாதம் செய்வதற்கோ யாருக்கும் உடன்பாடு இல்லை. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசும் அறிவித்திருக்கிறது. எனவே, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வந்த பிறகு அதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதோ, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோருவதோ காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு கிடையாது. சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தமிழக அரசின் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அறநிலையத்துறை செயலாளர் ஆகியோருடன் விரிவான விவாதம் நடத்தி எங்களுடைய கருத்தைப் பதிவு செய்வோம்.

கட்சியிலோ, அரசாங்கத்திலோ எந்தவிதமான ஊழலும் ஒளிதலும் கிடையாது. தேவையில்லாத பதற்றத்தையும், வதந்திகளையும், குழப்பங்களையும் உருவாக்குவது திமுகவின் நிலைப்பாடாக இருக்கிறது. இதை எதிர்த்துப் போராடி வருகிறோம். திமுகவின் குழப்பங்களுக்கும் வெற்றுப் பேச்சுகளுக்கும் தவெக, காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எங்களுடைய கூட்டணிக் கட்சிகள் தனித்து நின்று எதிர்ப்புத் தெரிவித்து போராடுவோம்.

அரசு பதவி ஏற்று 6 மாதங்கள் நிறைவடைகின்றன. இந்த ஆறு மாதங்களும் தமிழ்நாட்டில் நல்ல நிர்வாகத்தை வழங்கியிருக்கிறோம். தமிழக முதலமைச்சர் மீது மக்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். கூட்டணி அரசு மீது தமிழக மக்கள், இளைஞர்கள், மாணவர்கள், மாணவியர்கள் மிகப்பெரிய நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். திமுக நாள்தோறும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லி கொண்டிருக்கிறது. திமுகவிற்கு பதில் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் மக்கள் பணியாற்றி கொண்டு இருக்கிறார்கள். தேவையில்லாமல் பாரதிய ஜனதா கட்சியும், திமுகவும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன. திமுகவும், பாஜகவும் கூட்டு சேரப்போகிறார்கள் என்பதற்கான அறிகுறிகள்தான் நாள்தோறும் நடைபெறும் சம்பவங்களாக இருக்கின்றன. இரண்டு கட்சிகளும் ஒன்றாகச் சேரப்போகிறவர்கள் என்பதால் அவர்களுடைய கருத்துகளும் ஒன்றாகத்தான் இருக்கும். எங்களுடைய கருத்து எப்போதும் மக்களுடைய கருத்தாகவே இருக்கும். மக்கள் விரும்புகின்ற கருத்துகளையே நாங்கள் தெரிவிப்போம்.

வருகிற இடைத்தேர்தலில் அபரிமிதமான வெற்றியைப் பெறுவோம். அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். ஒரு தொகுதியைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம். இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்பதுதான் என்னுடைய பதில். ஒரு தொகுதியில்கூட திமுக வெற்றி பெறாது. தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவுகளை எங்களுடைய கூட்டணிக் கட்சிகள் இணைந்து ஆலோசித்துத்தான் எடுக்க வேண்டும். இன்னும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அதற்கான நேரமும் வரவில்லை. உரிய நேரம் வரும்போது எங்களுடைய தலைமை முடிவெடுக்கும். தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவோம். எந்தத் தேர்தலாக இருந்தாலும் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்தான் வெற்றி பெறப்போகிறார். இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் வரலாம், யார் வேண்டுமானாலும் போகட்டும். எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறப்போகும் ஒரே தலைமை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் இருக்கின்ற மகத்தான கூட்டணி அரசுதான் இவ்வாறு அவர் கூறினார்.

X