

சென்னை,
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், மத நல்லிணக்கத்தையும் வழிபாட்டு உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் முடிவெடுக்க வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள எல்லைக் கல்லில் இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள இடைக்காலத் தீர்ப்பு ஏற்புடையதல்ல.
மத நல்லிணக்கத்திற்கும்,சமூக ஒற்றுமைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய இத்தகைய விவகாரங்களில், அவசரமான இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பிப்பதைவிட, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும், வரலாற்று ஆவணங்களையும், சட்டப்பூர்வமான உரிமைகளையும் முழுமையாக ஆராய்ந்து முடிவெடுப்பதே நீதியின் மாண்பாகும்.
திருப்பரங்குன்றம் என்பது பல்வேறு மத நம்பிக்கைகளும், வழிபாட்டு மரபுகளும் தொடர்புடைய முக்கியமான ஆன்மிக தலமாகும். இத்தகைய இடங்களில் நிலவும் நீண்டகால நடைமுறைகளையும், மத நல்லிணக்கத்தையும் பாதுகாப்பது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கடமையாகும்.
நீதிமன்றத்தின் ஒவ்வொரு உத்தரவும் சமூகத்தில் அமைதியையும் நம்பிக்கையையும் வலுப்படுத்துவதாக அமைய வேண்டும். மாறாக, மத உணர்வுகளுக்கு இடையே தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக் கூடாது.
எனவே, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அனைத்து தரப்பு நியாயங்களையும், வரலாற்று ஆவணங்களையும் முழுமையாக பரிசீலித்து, மத நல்லிணக்கத்தையும் வழிபாட்டு உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.