திருப்பத்தூர் த.வெ.க. எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

த.வெ.க. எம்.எல்.ஏ.வின் வெற்றியை எதிர்த்து, தி.மு.க. முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் இந்த வழக்கை தொடர்ந்து உள்ளார்.

திருப்பத்தூர் த.வெ.க. எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
Published on

சென்னை

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பெரிய கருப்பன், ஒரு வாக்கு வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இதனை தொடர்ந்து, அவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவசர வழக்கில், 'சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த வாக்கை அந்த தொகுதி தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார். அதனால், அந்த வாக்கை மீட்டு, நான் போட்டியிட்ட தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற த.வெ.க., வேட்பாளர் சீனிவாச சேதுபதி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, தேர்தல் ஆணையம் சார்பில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பெயரில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், "தேர்தல் முடிவுக்கு எதிராக தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியுமே தவிர, இதுபோல 'ரிட்' வழக்கு தாக்கல் செய்ய முடியாது. அதனால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.

இதைத்தான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டமும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளும் உறுதி செய்துள்ளன. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஒரு தொகுதியில் எண்ணப்பட்ட தபால் வாக்கை, வேறு தொகுதிக்கு அனுப்ப முடியாது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்ட தபால் வாக்கை பெற்று, மறு எண்ணிக்கை நடத்தக்கோரும் மனுக்கள் மீது முடிவெடுக்க தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் இல்லை.

வழக்கமாக தபால் வாக்குகள், தொகுதி எண், பெயருடன் தான் அனுப்பப்படுகின்றன. அதனால் தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்பதால், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

எனினும், பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறியுள்ளதற்கு ஆதாரம் இல்லை என்பது தவறு. வாக்கு மாறி வந்தது குறித்து தேர்தல் அதிகாரியே தகவல் தெரிவித்திருக்கிறார். தபால் வாக்கு தொகுதி மாறி அனுப்பப்பட்டுள்ளது என்பதை தேர்தல் ஆணையம் மறுக்கவில்லை. தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டிருந்தால் என்ன நடைமுறை பின்பற்ற வேண்டும் என சட்டத்தில் தெரிவிக்கப்படவில்லை என்று கூறினார்.

இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், திருப்பத்தூர் த.வெ.க. எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. த.வெ.க. எம்.எல்.ஏ.வின் வெற்றியை எதிர்த்து, தி.மு.க. முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் இந்த வழக்கை தொடர்ந்து உள்ளார்.

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற த.வெ.க. எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி, கடந்த மாதம் நடந்த த.வெ.க. அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து இருந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com