திருப்புவனம் கொலை வழக்கு: தமிழகத்தில் 10 இடங்களில் சோதனை நடத்தும் என்.ஐ.ஏ.

திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் உள்ளிட்ட 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்புவனத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்குத் தொடர்பாக போலீசார், குறிச்சிமலை பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், திருபுவனத்தைச் சேர்ந்த நிஸாம் அலி, சர்புதீன், முகமது ரிஸ்வான், திருவிடைமருதூரைச் சேர்ந்த அசாருதீன், திருமங்கலக்குடியைச் சேர்ந்த முகமது தவ்பீக், முகமது பர்வீஸ், அவணியாபுரத்தைச் சேர்ந்த தவ்ஹித் பாட்சா, காரைக்கால் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முகமது ஹசன் குத்தூஸ் உள்பட பலரை அடுத்தடுத்து கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கு திருவிடைமருதூர் போலீசாரால் முதலில் விசாரிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. என்ஐஏ அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக மேலும் பலரை கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வரும் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா (37), கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்த அப்துல் மஜீத் (37), தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வடக்குமாங்குடி பகுதியைச் சேர்ந்த புர்ஹானுதீன் (31), திருமங்கலகுடி பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது (30), அதேப் பகுதியைச் சேர்ந்த நபீல் ஹாசன் (31) ஆகிய 5 பேர் குறித்து தகவல் தெரிவித்தால் ஒரு நபருக்கு ரூ.5 லட்சம் என்ற வீதத்தில் 5 பேருக்கும் சேர்த்து ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என என்ஐஏ கடந்த 2021ஆம் ஆண்டு அறிவித்தது.
வழக்கில் தலைமறைவாக இருந்த 5 பேர் உள்பட 18 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள், சென்னை பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதேநேரத்தில் தலைமறைவாக இருக்கும் நபர்களை கைது செய்ய பல்வேறு கோணங்களில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில் தேடப்பட்டு வந்த முகமது அலி ஜின்னா கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி கைது செய்யப்பட்டார்.
மேலும், இந்த வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்ட அப்துல் மஜீத், சாகுல் ஹமீது ஆகிய இருவரையும் ஜனவரி மாதம் என்ஐஏ போலீசார் சென்னையில் கைது செய்தனர்.
இந்நிலையில் திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ..ஏ அதிகாரிகள் இன்று திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, வேடச்சந்தூர் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன்படி திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொருளாளர் ஷேக் அப்துல்லா என்பவரின் வீட்டில் காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.
கொடைக்கானலில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டது. கொடைக்கானல் பில்லிஸ் வில்லா பகுதியில் உள்ள 2 இடங்கள், அப்சர்வேட்டரி சாலை, கான்வென்ட் ரோடு மற்றும் மேல்மலை கிராமமான பூம்பாறை பகுதியில் ஒரு இடத்திலும் கொடைக்கானல் அண்ணா சாலையில் முபாரக் என்பவரது வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.ஆம்பூர் பிரியாணி கடை வைத்து நடத்தி வரும் உரிமையாளர் இம்தாத்துல்லாவின் கொடைக்கானல் வீட்டிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர், பேட்டை பகுதியில் முகமது அலி என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.






