திருத்தணி சாலை விபத்து: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

திருத்தணி சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருத்தணியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், பீரகுப்பம் மதுரா கே.ஜி.கண்டிகை கிராமத்தில் இன்று பிற்பகல் 03.30 மணியளவில் திருத்தணியில் இருந்து சோளிங்கர் நோக்கிச் சென்ற டிப்பர் லாரியும், ஆர்.கே.பேட்டையில் இருந்து திருத்தணி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில் பேருந்தில் பயணம் செய்த திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம், அம்மையார்குப்பத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் (வயது 60) த/பெ. சுப்பிரமணி, சிவானந்தம் (வயது 53) த/பெ.சண்முகம், மகேஷ் (வயது 40) த/பெ.கண்ணியப்பன் மற்றும் முரளி (வயது 38) த/பெ.பெரியசாமி ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் 28 நபர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com