

திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கச்சேரி ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபிநாத்(வயது 33). இவர், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மகன் ஷர்வின்(3). திருத்துறைப் பூண்டி-திருவாரூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஷர்வின், பிரி.கே.ஜி. படித்து வருகிறான்.
சம்பத்தன்று மாலை பள்ளி முடிந்து ஷர்வின் வீட்டுக்கு வந்துள்ளான். அப்போது மாணவன் ஷர்வின் முகம் மற்றும் உடலில் காயங்கள் இருந்துள்ளன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர். இதுதொடர்பாக ஷர்வினிடம் கேட்டுள்ளனர். அப்போது தன்னை ஆசிரியை மற்றும் பெண் உதவியாளர் தாக்கியதாக சிறுவன் தெரிவித்துள்ளான்.
இதையடுத்து மறுநாள் மாணவனின் தந்தை கோபிநாத் பள்ளிக்கு சென்று கேட்டபோது ஆசிரியையும், உதவியாளரும் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் வகுப்பறையில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்க்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தினரிடம் கோபிநாத் கேட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சிறுவனின் தந்தை கோபிநாத்துக்கு காண்பித்துள்ளனர். இதில் சிறுவன் ஷர்வினின் கைகளை கயிற்றால் கட்டிப்போட்டு ஆசிரியை மற்றும் உதவியாளர் தாக்கும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சியை பார்த்து சிறுவனின் தந்தை கோபிநாத் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார்.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், சிறுவன் ஷர் வின் கைகளை கயிற்றால் கட்டிப்போட்டு தாக்கியதாக பள்ளி ஆசிரியை நாகை மாவட்டம் கௌப்பாடு பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகள் பாக்கியலட்சுமி(26), பெண் உதவியாளர் திருத்துறைப்பூண்டி அண்ணா நகரை சேர்ந்த மாணிக்கம் மனைவி செல்வி(55) ஆகிய 2 பேர் மீதும், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், 3 வயது சிறுவனின் கைகளை கயிற்றால் கட்டி தாக்கிய பள்ளி உதவியாளர் செல்வியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஆசிரியை பாக்கியலட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆசிரியை மற்றும் உதவியாளர் ஆகிய இருவரையும் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.