திருவையாறு, பேராவூரணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா

திருவையாறு, பேராவூரணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், அசோக்குமார் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புவனகிரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழிதேவனுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
திருவையாறு, பேராவூரணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் துரை.சந்திரசேகரன்(வயது 62). இவர், தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் உள்ளார். இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் எம்.எல்.ஏ.வின் மனைவி கண்மணி மற்றும் மகன், மகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.

அசோக்குமார் எம்.எல்.ஏ.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் என்.அசோக்குமார்(64). இவருக்கு கடந்த சில நாட்களாக இருமல், தொண்டை கரகரப்பு இருந்துள்ளது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவு வந்ததில் அசோக்குமார் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது குடும்பத்தினரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில் அவரது இளைய மகன் கீர்த்திக்கு(34) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அசோக்குமார் எம்.எல்.ஏ.வும், அவரது மகனும் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.

கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ.வும், கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான அருண்மொழிதேவன் திட்டக்குடியில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பொற்செல்வி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அவரது மனைவிக்கும், மூத்த மகன் அஜய்க்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. இதற்கிடையில் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ.வுக்கும் லேசான காய்ச்சல், இருமல் மற்றும் கொரோனாவுக்கான அறிகுறிகள் இருந்தன. எனவே அவர் நேற்று முன்தினம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் நேற்று அவருக்கும் தொற்று உறுதியானது.

இதையடுத்து அவர் டாக்டர்கள் ஆலோசனையின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com