

திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 15 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருடு போனது. இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் திருடர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட காஞ்சீபுரம் பாலுசெட்டி சத்திரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 27), வேலூரைச் சேர்ந்த சந்தோஷ்(28), தியாகராஜ்(37) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பகலில் நோட்டமிட்டு, இரவில் சென்று வாகனங்களை திருடி, குறைந்த விலைக்கு விற்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர். கைதானவர்களிடம் இருந்து 15 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.